சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் தீடீரென சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முற்றுகைப் போராட்டத்துக்கு பின் கலைந்து சென்ற இஸ்லாமியர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்ச் 11-ம் தேதி வரை தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என்று கூறிய இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கினர். இதனால் தலைமைச் செயலகம் செல்லும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று காலை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இருந்து சட்டசபை நோக்கி பேரணி நடத்தி, முற்றுகைப் போராட்டம் நடத்த தயார் ஆனார்கள். இதற்காக இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலைவாணர் அரங்கம் முன்பு திரண்டனர். அடையாள அட்டை மற்றும் தேசியக்கொடிகளுடன் பேரணி நடத்த ஆயத்தமாகினர். தடை உத்தரவை மீறி, போராட்டக்காரர்கள் சட்டசபையை நோக்கி முன்னேறினால் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் போராட்டம் காரணமாக, அண்ணா சாலையில் இருந்து வாலாஜா வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நேப்பியர் பாலம் வழியாக தலைமைச் செயலகம் வழியே செல்ல கூடிய பேருந்துகள் சிவானந்தா சாலையில் அனுப்பப்படுகின்றன. இந்த போராட்டம் ஒருபுறமிருக்க நெல்லை, மதுரை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகள் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த போராட்டம் தற்போது நிறைவு பெற்று உள்ளது. சட்டமன்றத்தை முற்றுகையிட சென்னை ஐகோர்ட் தடைவிதித்து இருப்பதால் பேரணி சேப்பாகம் வரை பேரணி சென்று அங்கு போராட்டத்தை முடித்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்க வந்தவர்கள் அமைதியாக கலைந்து செல்கின்றனர். போராட்டத்துக்கு பின் கலைந்து சென்ற இஸ்லாமியர்கள் திடீரென அண்ணாசாலையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறை உயரதிகாரிகள் போராட்டக்கார்களிடம் தொடரந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட அனுமதியளிக்கின்றனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: