தேனி சுப்பன் தெருவில் ஒடிந்து விழும் நிலையில் மின்கம்பம்: மாற்றி அமைக்க கோரிக்கை

தேனி: தேனி சுப்பன்தெருவில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரியத்தினர் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி நகரின் முக்கிய வணிக பகுதிகளில் ஒன்றாக சுப்பன் தெரு உள்ளது. இங்குள்ள பழைய பூ மாக்கெட் பின்புறம் உள்ள தெருவில் கடந்த 1999ல் ஊன்றப்பட்ட மின்கம்பம் உள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், இம்மின்கம்பம் மூலம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மின்கம்பத்தின் உச்சியில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கம்பத்தின் அடிப்பகுதியும் உறுதியற்றதாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் ஒடிந்து விழும் அபாயம் உள்ளது. திடீரென மின்கம்பம் ஒடிந்து விழுந்தால் அதிக போக்குவரத்துள்ள இப்பகுதியில் பெரும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அடிப்பாகம் முதல் உச்சிவரை துருப்பிடித்துக் கிடக்கும் இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: