போடியில் ‘பார்’ ஆகும் பஸ்நிலையம்: போலீசார் பாராமுகம், பயணிகள் அவதி

போடி: போடியில் பஸ்நிலையத்தை குடிமகன்கள் பார் ஆக மாற்றி வருவதால், உள்ளூர், வெளியூர் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேனி மாவட்டத்தில் முதல்நிலை நகராட்சியாக உள்ள போடியில் 33  வார்டுகள் உள்ளன. இந்த தாலுகாவில் 15 ஊராட்சி ஒன்றிய கிராமங்கள், மேலசொக்கநாதபுரம், மீனாட்சிபுரம், பூதிப்புரம் என 3 பேரூராட்சிகள், போடிமெட்டு, குரங்கணி, அகமலை ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. தமிழகம், கேரளாவை இணைக்கும் தனுஷ்கோடி-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையும் போடி வழியாகச் செல்கிறது.

Advertising
Advertising

இதனால், போடி பஸ்நிலையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதனால், பஸ்நிலையம் அருகே உள்ள வாரச்சந்தையை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. பஸ்நிலையத்தின் நான்குபுறமும் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், போதிய அடிப்படை வசதியில்லை. ஒரே இடத்தில் மட்டும் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த இடம் தற்போது சுமை இறக்கும் இடமாக மாறி வருகிறது. மேலும், ஒரு பகுதியில் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணிகள் நிழற்குடையில் குடிமகன்கள் அமர்ந்து மது குடிக்கும் இடமாக மாறி வருகிறது. போதையில் அலங்கோலமாக படுத்துக் கிடக்கின்றனர்; அவதூறாகவும் பேசுகின்றனர்.

இதனால், பஸ்நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். நிழற்குடையில் அமருவதை தவிர்க்கின்றனர். மேலும், வணிக வளாக கடைப்பகுதிகளையும் பார் ஆக மாற்றி வருகின்றனர். இது குறித்து பஸ்நிலையத்திற்குள் இருக்கும் போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இது குறித்து புகார் தெரிவித்தும் போடி நகர் காவல்நிலைய போலீசார் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். எனவே, போடி நகரில் பொதுமக்களின் நலன் கருதி, பஸ்நிலையத்தில் மது அருந்தும் குடிமகன்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: