டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு: சிஏஏ-வுக்கு எதிரான 2 கோடி கையெழுத்து நகல் ஒப்படைப்பு!

டெல்லி: டெல்லியில் திமுக தலைமையில் தமிழக எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பிரதிகளை வழங்கினர். சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும், மாணவ அமைப்புகளும் போராடி வருகின்றன. தொடர்ந்து, சட்டமன்றத்தில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டன. ஆனால் அதற்கான மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுக வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கையெழுத்து பிரதிகள் ஒப்படைக்கப்பட்டது. சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து பிரதிகளுடன் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவருடன் சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக 2 கோடி பேர் கையெழுத்திட்ட கையெழுத்து பிரதிகள் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், என்.ஆா்.சிக்கு வழிவகுக்கும் என்.பி.ஆா். தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடந்த கையெழுத்து இயக்கத்தில், 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 போ் கையெழுத்திட்டனா். இதில் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகள் அனைத்தும் விமானத்தில் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்நிலையில், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் தமிழக எதிர்க்கட்சியினர், டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, கையெழுத்து பிரதிகளை வழங்கினர். இந்த சந்திப்பில் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ம.தி.மு.க. சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று குடியரசுத் தலைவரை, அவர்கள் வலியுறுத்தினர்.

டி.ஆர். பாலு பேட்டி:

கையெழுத்து நகல்களை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்த பின் டி.ஆர். பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என ஜனாதிபதியிடம் முறையிட்டோம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.குடியரசு தலைவரிடம் 2 கோடி கையெழுத்து நகல் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தார்.

Related Stories: