×

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது, ரூ.2 லட்சம் வழங்கப்படும் : சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : குழந்தைகளுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக  மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூறும் வகையில், அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக, அனுசரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 3ம் நாளான இன்று, சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் முதல்வர் உரையில் இடம்பெற்ற அறிவிப்புகளை கீழ் காணலாம்.

*ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது, ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

*பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு உதவித் தொகுப்பு வழங்கப்படும். இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும்.  அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும்.

*பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோருக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.  இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.  

*பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு வயது, கல்விக்கு ஏற்ப அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
 
*தமிழ்நாட்டில், பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம் சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. அதனை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும்.  

*ஹஜ் பயணிகளுக்கு, சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும்.

*தமிழ்நாட்டில் உள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறிய நிலையில் உள்ள பேஷ் இமாம், மோதினார், அரபி ஆசிரியர் மற்றும் முஜாவர் ஆகிய உலமாக்களுக்கு தற்போது 1,500/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  உலமாக்களுக்கு வழங்கப்படும் இந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகை 1,500/- ரூபாயிலிருந்து 3,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

*தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 25,000 ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்


Tags : girls , CM, Palanisamy, Announcement, Woman, Children
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே