×

தமிழகத்தில் முதல்முறையாக மாடுகளுக்கு வெற்றிகரமாக ரத்த மாற்று அறுவை சிகிச்சை: அரசு கால்நடைத்துறை வேலூரில் சாதனை

வேலூர்: தமிழகத்தில் முதல்முறையாக மாடுகளுக்கு ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்து வேலூர் கால்நடைத்துறை சாதனை படைத்துள்ளது.வேலூர் அரசு கால்நடைத்துறை டாக்டர் ரவிசங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாடுகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், மாடுகளின் உயிருக்கு சில நேரங்களில் ஆபத்தாகி விடுகிறது. எனவே, ரத்தம் உற்பத்தி செய்வதற்கான ஊசிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், மனிதர்களைப் போன்று மாடுகளுக்கும் ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்து சிந்தித்தேன். அதன்படி, மருந்து கடைகளில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக விற்பனை செய்யப்படும் லைன், ரத்தம் சேகரிக்கும் பை ஆகியவற்றை வாங்கி மாடுகளுக்கான ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பை தயாரிக்கப்பட்டது.

இதற்காக, ரத்தம் உறையாமல் பாதுகாக்கக்கூடிய கெமிக்கல் அந்த பையில் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதன்முறையாக வேலூரில்தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு இந்த ரத்த மாற்று அறுவை சிகிச்சைக்கான பை தயாரிக்கப்பட்ட நிலையில், 15 மாடுகளுக்கு இதுவரை அறுவை சிகிச்சை மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. அந்த மாடுகள் நலமாக இருக்கிறது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த அறுவை சிகிச்சைக்கான பைகள் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

ரத்த குரூப் அவசியமில்லை
மனிதர்களுக்கு ரத்தம் ஏற்றும்போது, சம்பந்தப்பட்ட குரூப் ரத்தம் மட்டுமே ஏற்றப்படுகிறது. ஆனால், மாடுகளுக்கு முதல் முறையாக ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது, எந்த வகையான குரூப் ரத்தம் தேவை என்பதை சோதிக்க தேவையில்லை. 2வது முறை ரத்த மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது மட்டுமே குறிப்பிட்ட குரூப்பை சேர்ந்த ரத்தம் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் டாக்டர் ரவிசங்கர் தெரிவித்தார்.



Tags : Tamil Nadu, Successful , Blood Transfusion, Achievement,Vellore
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்