×

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என அமைச்சர் தவறான தகவல் கூறுகிறார்: துரைமுருகன் பேட்டி

சென்னை: பேரவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிப்பது தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் கடந்த மாதம் ஜனவரி 8ம் தேதி பேசியது தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார். இதன் மீதான விவாதத்தை தொடர்ந்து அமைச்சர் பேசியதில் எந்தவிதி உரிமை மீறலும் இல்லை என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரட்டை குடியுரிமை தொடர்பாக திசை திருப்பும் வகையில் பேசிய அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்பிறகு எதிர்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கூறியதாவது: சட்டசபையில் எங்கள் உறுப்பினர் தங்கம் தென்னரசு, தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்னை கொடுத்தார். அமைச்சர் இந்த அவையில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தருவோம் என்று கூறினார். ஆனால் தங்கம் தென்னரசு பேசும்போது, இரட்டை குடியுரிமை தரும் உரிமை மத்திய அரசுக்குதான் உள்ளது. மத்திய அமைச்சர் இரட்டை குடியுரிமை தர முடியாது என்று கூறிவிட்டார். இரட்டை குடியுரிமை தருவதற்கு, சட்டத்தில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். இங்கே இருக்கிற அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது. ஏதோ எடுபிடி போல பாண்டியராஜன் வருகிறார், போகிறார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தருவோம் என்று கூறி அவையை திசை திருப்பியுள்ளார். இதையெல்லாம் அமைச்சரிடம் கேட்டதற்கு முறையாக பதில் சொல்லவில்லை. அதனால் நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். அமைச்சர் தவறான தகவலை தந்துள்ளார் என்று சபாநாயகரிடம் கூறினோம். சபாநாயகர் அவர் மீது உரிமை மீறல் இல்ைல என்று தீர்ப்பளித்துள்ளார். சபாநாயகர் மகா உத்தமர். இரட்டை குடியுரிமைக்கு மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. இவர்கள் தவறாக சொல்கிறார்கள். அதற்கு சபாநாயகர் நியாயம் கற்பிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.பிரின்ஸ் (காங்கிரஸ்): இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக அதிமுக, பாஜ இரட்டை வேடம் போடுகின்றன. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. தமிமுன் அன்சாரி (மஜக): இந்த பிரச்னையை உரிமை குழுவுக்கு எடுத்துச் செல்ல உள்ளோம்.

Tags : Minister ,Duraimurugan ,interview ,Sri Lankan Tamils , Minister misrepresents, Sri Lankan Tamils, dual citizenship, Duraimurugan
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...