×

அதிமுக தேர்தல் வாக்குறுதியில் மதுவை ஒழிப்போம் என்றாலும் மது வருமானத்தை நம்பியே தமிழக அரசு உள்ளது: திமுக குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக தேர்தல் வாக்குறுதியில் மதுவை  படிப்படியாக ஒழிப்போம் என்று சொன்னீர்கள். ஆனால், தமிழக அரசு மது  வருமானத்தை நம்பியே உள்ளது என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் குற்றம் சாட்டினார்.சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பத்மநாதபுரம் மனோ தங்கராஜ் (திமுக) பேசும்போது, தமிழக அரசின் மொத்த வருவாயில் 13 சதவீதம் மட்டுமே மூலதன செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதி ரூ.30,028 கோடி பாக்கி உள்ளது. உங்களுடைய தாரக மந்திரத்தில் ஒன்று அமைதி. எனவேதான் மத்திய அரசு என்ன செய்தாலும் அமைதியாகவே இருக்கிறீர்கள். அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: கல்வி மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டபோது, திமுக தான் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தீர்கள். அதை தடுத்தீர்களா?, மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் அதிமுக குரல் கொடுக்கும். சக்கரபாணி (திமுக கொறடா): அமைச்சர் இங்கே தவறான தகவலை தருகிறார். கல்வி மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டபோது அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்தது. தற்போது நீட் தேர்வு கட்டாயமாகி இருக்கிறது. அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்களுக்கு வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் நீங்கள் ஏன் இதை எதிர்க்கவில்லை.

முதல்வர் எடப்பாடி: திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இதுபற்றி எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை? அங்கு குரல் கொடுத்தால் நிறைவேறும். அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தான் விவசாயத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டது. அப்போது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். சக்கரபாணி: சுமார் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் திமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது.  மனோ தங்கராஜ்: டாஸ்மாக் மது வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், கடன் அளவு இருமடங்கையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வை குறைத்துள்ளது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எந்த ஆண்டும் நிதி வருவாய் பற்றாக்குறை 3 சதவீதத்திற்கும் மேல் செல்லவில்லை. கடன் அளவும் 25 சதவீதத்திற்குள்தான் இருக்கிறது. மனோ தங்கராஜ்: தேர்தல் வாக்குறுதியில் மதுவை படிப்படியாக ஒழிப்போம் என்று சொன்னீர்கள். ஆனால், மதுவால் அரசுக்கு கிடைக்கும் வருமானம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இப்போது மது விலையையும் உயர்த்தி இருக்கிறீர்கள். இதனால், மேலும் வருமானம் அதிகரிக்கும். மது வருமானத்தை நம்பியே அரசு உள்ளது.

அமைச்சர் தங்கமணி: தமிழகத்தில் 2016ம் ஆண்டு 6,215 மதுக்கடைகள் இருந்தன. அதன்பிறகு இருமுறை தலா 500 கடைகள் மூடப்பட்டன. தற்போது, 5,262 மதுக்கடைகள் தான் தமிழகத்தில் உள்ளது. மதுபான விலை உயர்வால் வருமானம் அதிகரித்து இருக்கிறது. அன்றைக்கு ஒரு குவாட்டர் விலை என்ன?. இன்றைக்கு என்ன விலை விற்கிறது? எங்களது கொள்கை பூரண மதுவிலக்கு என்பது தான். மனோ தங்கராஜ்: துணை முதல்வர் இங்கே பட்ஜெட் வாசிக்கிறார். ஆனால், அதன்பிறகு முதல்வர் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதுவே தனி பட்ஜெட் போல் இருக்கிறது. அந்த அறிவிப்புகளை ஏன் பட்ஜெட்டிலேயே அறிவிக்கக்கூடாது. நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 4 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐஐடியில் 7 பேருக்கு மட்டுமே சீட் கிடைத்துள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆண்டு பிளஸ்2 பாடத்திட்டத்தை படித்தாலே போதும் நீட் தேர்வுக்கு 80 சதவீதம் இதில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


Tags : DMK ,Tamil Nadu ,AIADMK , Although alcoholism ,AIADMK election,alcohol income,DMK alleges
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...