இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை விவகாரம் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் அமைச்சர் பேசியது உரிமை மீறல் பிரச்னை இல்லை என்று சபாநாயகர் கூறியதால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் ஒரு பொருள் பற்றி கூறினார். அப்போது, ஒரு உரிமை மீறல் பிரச்னையை தங்கம் தென்னரசு கொடுத்துள்ளார். அதில், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 8ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், அவையில் பேசியது, அவை உரிமை மீறலாக உள்ளது எனக்கூறி, அது பற்றி பேச அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அனுமதி வழங்குகிறேன். அதற்கு விளக்கம் அளிக்க அமைச்சருக்கும் அனுமதி வழஙகப்படுகிறது. திருச்சுழி தங்கம் தென்னரசு(திமுக): கடந்த ஜனவரி 8ம் தேதி நடந்த கூட்டத் தொடரில், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது, சாத்தியமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இங்கே சுட்டி காட்டினார். அப்போது, அமைச்சர் பாண்டியராஜன் குறுக்கிட்டு அது சாத்தியம் தான். இரட்டை குடியுரிமை வழங்க முடியும் என்ற கருத்தை தெரிவித்தார்.  இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டு பேசியுள்ளார். ஆனால், அமைச்சர் பாண்டியராஜனோ, இரட்டை குடியுரிமை அவர்களுக்கு வழங்கப்படும் என்று தவறான தகவல்களை கூறினார்.  அவர் மீது உரிமை மீறல் விதி எண் 219ன் படி அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  அமைச்சர் பாண்டியராஜன்:  ஒரு லட்சம் பேர் அகதிகளாக இங்கு வந்தவர்களின் முகாம்களில் தற்போது 59ஆயிரம் பேர் மட்டும் தான் உள்ளனர். அவர்களில் 10ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பி சென்றுவிட்டனர். அதிமுக அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, மத்திய அரசு இலங்கையில் தமிழர்களுக்கு 46,000 வீடுகளை கட்டியுள்ளது. அங்கு வசதி வாய்ப்புகள் மீண்டும் வரும் போது இங்கே இருப்பவர்கள் அங்கு சென்று தனது குடியுரிமையை மீட்டெடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 நாங்கள் கேட்பது என்னவென்றால், அவர்களுக்கு இங்கே தொழில் ெசய்வதற்கும், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் என்ன குடியுரிமை தேவைப்படுமோ அதையும் தாருங்கள் என்பது தான். அதில் ஒன்று இரட்டை குடியுரிமை. அவர்கள் அங்கும் ஓட்டு போடலாம். இங்கும் ஓட்டு போடலாம். இதன் மூலம் சில சொத்துக்கள் வாங்கலாம். தனியாரில் வேலை வாயப்பு கிடைப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், ஓசிஐ மூலம் 1984ல் இருந்து 2லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இனியும் பெற தடையில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இப்போதுள்ள பிரச்னை, அகதிகளுக்கா அல்லது திருப்பி அனுப்பக்கூடிய இலங்கை தமிழர்களுக்கா என்பது தான் கேள்வி. இது தொடர்பாக முதல்வர், அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார். எனவே இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்கிற அரசு தமிழக அரசு தான்.  

 (அப்போது, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எழுந்து பேச அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் பேச அனுமதிக்க வில்லை. இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.) சபாநாயகர் தனபால்: தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்னையை எழுப்பியிருக்கிறார். இது தரப்பு விவாதங்களை கேட்டு இப்போது நான் தீர்ப்பளிக்கிறேன். அமைச்சர் பேசியதில், எவ்வித உரிமை மீறலும் இல்லை என்று நான் தீர்ப்பளிக்கிறேன். அப்போது துரைமுருகன் எழுந்து மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு சபாநாயகர், நான் அளித்த தீர்ப்பின் மீது எதுவும் பேச முடியாது. வேறு எதாவது இருந்தால் பேசுங்கள் என்றார்.அப்போது துரைமுருகன், தாங்கள் அளித்த தீர்ப்பின் மீது எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன்.ஆனால், குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்த பின்னரும், அதை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பாண்டியராஜன் இப்படி பேசுகிறார். எனவே இதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

 பின்னர் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.

Related Stories: