×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 5வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை: வண்ணாரப்பேட்டை லாலகுண்டா பகுதியில் 5வது நாளாக நேற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு,  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும்  முஸ்லிம் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 14ம்தேதி சென்னை வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

5வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் தொடர்பாக ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இந்த பிரச்னையை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.ஆனால், முஸ்லிம்களின் போராட்டம் குறித்து இதுவரை தமிழக முதல்வர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால், போராட்டம் முடிவுக்கு வருமா, தீவிரமடையுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் போராட்டம் காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். கடை வைத்துள்ள வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர். தங்கசாலை, சிமிட்ரி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வேலைக்கு செல்வோர், மாணவ, மாணவிகளும் கஷ்டப்படுகின்றனர்.எனவே, இந்த போராட்டத்துக்கு முதலமைச்சர் விரைவில் தீர்வுகாண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. போராட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் 5வது நாளாக பதற்றம் நிலவுகிறது.

Tags : Muslims ,Citizenship Amendment Act Against Muslims 5th Day , Citizenship, Amendment Act, Muslims,
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...