சிங்காரவேலர் சிலைக்கு மாலை போட எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கட்சியினருடன் பாஜவினர் மோதல்: சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை: சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பாஜவினர் திடீரென எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் மோதல் சூழ்நிலை உருவானது. இதனால் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சிங்காரவேலரின் 161வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா.பாண்டியராஜன், பெஞ்சமின், கடம்பூர் ராஜு மற்றும் கலெக்டர் சீதாலட்சுமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் கோஷமிட்டனர். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பாஜவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர் மோதலாக மாறும் சூழ்நிலை உருவானது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பதற்றம் நிலவியது. இதையடுத்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தத்துவங்களை பள்ளிகளில் போதிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பாஜவுடன் நெருக்கமாக உள்ள மாநிலங்கள் கூட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த அதிமுக அரசு குடியுரிமை சட்டம் குறித்து பேசினாலே நடவடிக்கை எடுப்பதை பார்க்கும்போது, பாஜவின் பினாமி ஆட்சி போல் தெரிகிறது.எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை தனியார் அமைப்பிடம் ஒப்படைப்பது வேதனையாக உள்ளது. அதுவும் மத ரீதியாக அமைந்த அமைப்பிடம் ஒப்படைப்பதை கண்டிக்கிறோம். டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் சுதந்திரமாக விசாரணை நடைபெற வேண்டும் என்றால் சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். டெல்டா வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என கூறுவது முதல்வரின் வெற்று அறிவிப்பு. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதை தொடர்ந்து மீனவர் அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் சிங்காரவேலர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: