×

சென்னை மாநகராட்சி எல்லையில் செயல்பட்டு வரும் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் : திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பணிபுரிவோர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். எனவே, இந்த தொகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சிசிடி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே, இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு வசதி இல்லை. குப்பை அள்ள போதிய ஆட்கள் இல்லை. மேடவாக்கத்தில் அரசு ஆண்கள் பள்ளி உள்ளது. இதில், ஏராளமானோர் படிக்கின்றனர். இந்த பகுதிகளில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருங்குடி குப்பை கிடங்கில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவோ, காஸ் தயாரிக்கவோ அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, இதில் ஒன்றையாவது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் இயக்கப்பட்ட பேருந்துகள் பல நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட குளிர்சாதன பேருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் நலன்கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேணடும். சோழிங்கநல்லூர் தாலுகா பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு நீதிமன்றம் கொண்டு வர வேண்டும். இந்த தொகுதி மாணவர்கள் நலன்கருதி பொறியியல் கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும். சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டி தரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், தற்போது வரை வட்டாட்சியர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. பாலவாக்கம் ஆதிதிராவிட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேல்படிப்புக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மாணவர்கள் நலன்கருதி இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் 4 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த பகுதிகள் ஆரம்பத்தில் ஊராட்சியாக இருந்தது. தற்போது இது சென்னை மாநகராட்சியுடன் இணைப்பட்டுள்ளதால், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.

இந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கொண்டு வந்து இலவசமாக சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தரமணி-சிறுசேரி வரை உயர்மட்ட சாலையும், மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார். ஆனால், தற்போது வரை அந்த திட்டம் ஏட்டளவில்தான் உள்ளது. இதனால், ஓஎம்ஆர் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பெருங்குடி கல்லுக்குட்டை, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர் நலனை கருத்தில் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் விளையாட்டு திடல், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். கோவிலம்பாக்கம்-மேடவாக்கம் பகுதியில் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 104 நியாய விலை கடைகள் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும். நிதிநிலை அறிக்கையில் வாடகை ஒப்பந்த முத்திரை கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எளிமைப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : OMR ,Chennai Municipal Corporation ,East Coast Road ,DMK MLA , OMR,Chennai Municipal Corporation boundary, 4 tolls, East Coast Road
× RELATED டைடல் பார்க், தகவல் தொழில்நுட்பம்...