×

சென்னை மாநகரின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : திமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் வேலுமணி விளக்கம்

சென்னை: சென்னையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று திமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ் (திமுக): சென்னை அருகே பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், கலைஞர் ஆட்சியில் ெகாண்டு வரப்பட்ட 200 மில்லியன் லிட்டர் நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் நிலையம் மூலம் தான் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகரின் குடிநீருக்கென்று எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், மருத்துவ உபகரணங்களும் இல்லை. செம்மஞ்சேரியில் 30 படுக்கை கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழிங்கநல்லூர் தொகுதியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனை உருவாக்க வேண்டும். மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை  தரம் உயர்த்த வேண்டும்.

அமைச்சர் எஸ்பி.வேலுமணி : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எம்எல்ஏ குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு செய்யப்படும். நெம்மேலியில் 2வது கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். தற்போது பெய்த மழையில் சென்னை ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. இதுதவிர கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே இந்தாண்டு சென்னையீல் குடிநீர் பிரச்னை இருக்காது. சென்னையின் நிரந்தர குடிநீர் பிரச்னையை தீர்க்க 400 மில்லியின் லிட்டர் பேரூரிலும், 150 மில்லியன் லிட்டர் நெம்மேலியில் இன்னொரு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. 230 மில்லியன் லிட்டரில் இருந்து 800 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Velumani ,Chennai Municipal Council , Permanent solution, drinking water problem ,Chennai Municipal Council, Minister Velumani
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...