பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பயணிகளை அச்சுறுத்தும் நிழற்குடை

பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை சிதிலமடைந்து ஆபத்தான முறையில் இருப்பதால், பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ளன. பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளான  பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது  வியாபாரம், வேலை, மருத்துவம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு  தேவைகளுக்காக  இந்த நிறுத்தம் வந்து, பஸ் பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று  வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்துகளும், சென்னையில் இருந்து தாம்பரம் மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் இந்த பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.  

Advertising
Advertising

இங்கு, பயணிகளின் வசதிக்காக பல லட்சம் மதிப்பில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டன.  நாளடைவில் இதனை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், தற்போது, சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, கிண்டி மார்க்கமாக செல்லும் சாலையில் அமைந்துள்ள நிழற்குடையின் மேற்கூரை முற்றிலும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஓடுகள் உடைந்து, கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால், எந்த நேரத்தில் ஓடுகள் உடைந்து தலையில் விழுமோ என்ற அச்சத்துடன் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சேதமடைந்து காணப்படும் பல்லாவரம் பேருந்து நிறுத்த மேற்கூரையை உடனடியாக சீரமைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: