புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் : ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: புழல் தண்டனை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை புழல் தண்டனை சிறைச்சாலையில் சுமார் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த ஜேம்ஸ் ஒகாபர்(42) மதுரையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி சேர்ந்த கார்த்திக்(40), இவர் சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், இருவருக்கும் நேற்று இரவு 7 மணி அளவில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் அருகிலிருந்த மண்வெட்டியைக்கொண்டு ஜேம்ஸ் ஒகாபர் மீது அடித்தார். இதில், அவருக்கு நெற்றி தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஓடிவந்து ரை மீட்டு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சிறைத்துறை சார்பில் கொடுத்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் தண்டனை சிறைச்சாலையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: