×

2011ல் நடந்த குரூப் 2 தேர்விலும் மெகா மோசடி அம்பலம் கடலூர், விழுப்புரத்தை சேர்ந்த 60 பேர் முதல் 100 இடங்களை பிடித்தது எப்படி?: ஜெயகுமார், ஓம்காந்தனை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 60 பேர் முதல் 100 இடங்களை பிடித்து குறித்து முக்கிய குற்றவாளியான ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனிடம் மீண்டும் காலிவல் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாக உள்ள ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேரை ஆவணங்களுடன் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் இதுவரை 46 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது ஜெயகுமாரின் நெருங்கிய நண்பரான திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார்(38) என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்தான் கீழக்கரை மையத்தில் மோசடி விண்ணப்பதாரர்களுக்காக விண்ணப்பித்தது. இதற்காக ராயப்பேட்டையில் ‘மேக்னஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் அலுவலகத்தை பயன்படுத்தி உள்ளார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டிஎன்பிஎஸ்சியில் மற்றொரு மெகா மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வின் போது கடலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 60 பேர் முதல் 100 இடங்களை பிடித்து இருந்தனர். அப்போது தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டை சேர்ந்த தயாநிதி, பத்திரக்கோட்டையை நேர்ந்த தவமணி ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கு வினாத்தாள் வெளியானதால் தான் முதல் 100 இடங்களில் 60 பேர் வந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இதை போலீசார் அப்போதே முறையாக விசாரணை நடத்தி இருந்ததால் ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனின் மோசடி வெளியே வந்து இருக்கும். முறையாக விசாரணை நடத்தாததால் தான் 10 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 4 மோசடி மூலம் தற்போது இந்த மெகா மோசடி வெளியே வந்துள்ளது.இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வு மோசடி வழக்கில் குற்றவாளிகளாக இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளர்க் ஓம்காந்தனை சிபிசிஐடி போலீசார் சேர்த்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதனால் குரூப் 2 தேர்வில் முறைகேடாக அதாவது கடலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 60 பேர் வெற்றி பெற்று உயர் பதவிகளில் உள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த 12 பேர் தலா ₹8 லட்சம் பணம் கொடுத்து வெற்றி பெற்று தற்போது வணிக வரித்துறை உள்ளிட்ட முக்கிய அரசு துறைகளில் அதிகாரிகளாக பதவி வகித்து வருவதும் தெரியவந்துள்ளது. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் குரூப்2 தேர்வில் வெற்றி பெற்று தற்போது உயர் பதவியில் உள்ள 12 அரசு அதிகாரிகளும் இன்று கடலூரில் உள்ள மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனை மீண்டும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதேநேரம் 12 அரசு அதிகாரிகளிடம் இன்று நடைபெறும் விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டால் அவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சியில் அடுத்தடுத்து மோசடிகள் வெளியாகி வருவதால் மோசடியாக பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ள அரசு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags : Villupuram ,Cuddalore ,examination ,Group 2 ,court hearing ,CBI ,Villupuram Jaikumar ,Omkandan , Group 2 exams , Cuddalore ,Villupuram, CBI court ,hearing
× RELATED கடலூர், விழுப்புரம் கோட்டத்தில் 59 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்