குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளனர்.இந்த போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக ேநற்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த ஆட்சேபனையும் இல்லை. காவல்துறையில் அனுமதி கோரி அவர்கள் அளித்த விண்ணப்பமே போராட்டம் அமைதியான முறையில் இருக்காது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார்.சென்னை மாநகர காவல்துறை தரப்பில், ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல்  எஸ்.ஆர்.ராஜகோபால் வாதிடும்போது,   அமைதியான முறையில் போராட்டம் நடத்த முன்வந்தால் அதற்கு அரசு உரிய நிபந்தனையுடன் அனுமதி அளிக்க தயாராக உள்ளது.அதே நேரத்தில் இந்த வகையான முற்றுகை போராட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது.

முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி கோரி நேற்று தான் மனு அளித்துள்ளனர். அந்த மனு காவல்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அனுமதியை மீறி சட்டப்பேரவை முற்றுகையை அனுமதிக்க முடியாது. சென்னையில் பிப்ரவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதிவரை போராட்டம் நடத்த தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளது அமலில் உள்ளது என்றார்.இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், போராட்டம் நடத்த அனுமதி கோரி சட்டப்படி ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று விதி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்தான் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறிவித்துள்ள முற்றுகை போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.இந்த மனு குறித்து  மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர்   பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 12க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: