திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டது என்றும், எம்.சாண்ட் வாங்கியதில்  பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு செப்டம்பர் 4ம் தேதி முரசொலியில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வரும் 24ம் தேதி மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பி.குமரேசன் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சி டெண்டர்களில் எம்.சாண்ட் உபயோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு அதுதொடர்பாக சிறப்பு விசாரணை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.  

 இதையடுத்து, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அமைச்சர் வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் எம்.சாண்ட் உபயோகம் தொடர்பாக மாநகராட்சி டெண்டர்களில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. எம்.சாண்டின் விலை  தொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக அறப்போர் இயக்கத்துக்கு அதே மாநகராட்சி அளித்துள்ள தகவலுக்கும்  முரண்பாடுகள் உள்ளது.

  எதிர்கட்சித் தலைவர் என்ற முறையிலும் எம்.சாண்ட் உபயோகத்தில் ஊழல் நடந்துள்ளது என்ற உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிட்டேன்.

உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தனிப்பட்ட முறையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இதே எம்.சாண்ட் விவகாரத்துக்காக தமிழக அரசு சார்பில் எதிர்கட்சித் தலைவர் மீது அவதூறு வழக்கு தொடர முடியாது.    

 எனவே, திமுக தலைவரான என் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு வரும் 24ம் தேதி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: