×

பல கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரம் அன்புச்செழியன் ஐடி அதிகாரிகள் முன் ஆஜர்: 136 கோடி அபராதம் கட்ட ஒப்புதல் என தகவல்

சென்னை: பல கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியன் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அப்போது, அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ₹77 கோடி பணம் எந்த வருவாயில் வந்தது மற்றும் ₹300 கோடி வரி ஏய்ப்புக்கான கணக்கு ஆவணங்களை வைத்து நேரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ₹136 கோடி வரை அபராதம் கட்ட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விஜய் நடித்து வெளிவந்த ‘பிகில்’ படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. ஆனால் வருமான வரித்துறைக்கு திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் சரியாக கணக்கு காட்டவில்லை என்ற புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சென்னையில் நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கல்பாத்தி எஸ். அகோரம், பைனான்சியரும் அதிமுக பிரமுகருமான அன்புச்செழியன், விநியோகஸ்தர் சுந்தர் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் கடந்த வாரம் 38 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

3 நாட்கள் நடந்த இந்த சோதனையில், பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடுகளில் இருந்து, கணக்கில் வராத ₹77 கோடி ரொக்கம், ஒரு கோடி அளவுக்கு இரண்டு பைகள் நிறைய தங்க, வைர நகைகள் மற்றும் ₹300 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி, திரைப்பட விநியோக உரிமம் ெபற்ற ‘ஸ்கிரீன் கிரீன்’ உரிமையாளர் சுந்தர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.அதன்படி கடந்த 11ம் தேதி பைனான்சியர் அன்புச்செழியன் சார்பில் அவரது ஆடிட்டர் மற்றும் நடிகர் விஜய் சார்பில் அவரது ஆடிட்டர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைதொடர்ந்து ஏஜிஎஸ் திரைப்பட குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி கடந்த 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதைதொடர்ந்து அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ₹77 கோடி ரொக்க பணம் மற்றும் ₹300 கோடி வரி ஏய்ப்புக்கான ஆவணங்களின் கணக்காய்வு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த பணி ேநற்று முன்தினம் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கான கணக்குகள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புச்செழியனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பினர்.அந்த சம்மனை தொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியன் தனது ஆடிட்டருடன் நேற்று காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ₹77 கோடி பணம் எந்த வருவாயில் கிடைத்தது. அதற்கான ஆதாரங்கள் எங்கே? பரிவர்த்தனை சட்டத்தின் படி இவ்வளவு பணம் வீட்டில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். இந்த பணம் எந்த வங்கியில் இருந்து பெறப்பட்டது. முறையாக பணம் பெறப்பட்டதா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புச்செழியனிடம்  விசாரணை நடத்தினர். அதற்கு அவர் அளிக்கும் பதிலை வாக்குமூலமாகவும் பதிவு செய்து வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து அன்புச்செழியன் வரி ஏய்ப்புக்காக அபராதமாக ₹136 கோடி வரை கட்ட ஒப்புதல் தெரிவித்தாக வருமான வரித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Mathrubhumi ,tax evasion affair ,IT officials , A multi-crore, tax ,affair,officials:
× RELATED கோடநாடு கொலை குற்றவாளிகள் சயான், மனோஜ்...