அமலாக்கத் துறைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள சொத்துக்களை முடக்கும் அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கை ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.  பொதுத்துறை வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவதற்காக சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதில் வாதங்கள் முடிந்து கடந்த 13்ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர், விஜய் மல்லையா அளித்த பேட்டியில், ‘வங்கிகள் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை எனது சொத்துகளை முடக்கியது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. வங்கிகளுக்கு நான் பணத்தை செலுத்த தயாராக இருக்கிறேன். ஆனால், அமலாக்கத் துறை எனது சொத்துகள் தான் வேண்டும் என தெரிவிக்கிறது.

இதில் கடந்த 4 ஆண்டுகளாக காரணமே இல்லாமல் அமலாக்கத் துறையும், சிபிஐ.யும் தனக்கு தொல்லைகள் அளித்து வருகின்றன,’ என்றார். இந்நிலையில், விஜய் மல்லையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்தியாவில் உள்ள எனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.   தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, “வழக்கை விசாரிக்க அவகாசம் தேவைப்படுவதால், விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்,’’ என்றார் இதை ஏற்ற நீதிபதிகள், ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கை விசாரி–்ப்பதாக  அறிவித்தார்.

Related Stories: