×

முஸ்லிம்களின் கல்லறை மீதா கோயிலை கட்ட போகிறீர்கள்? உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கடிதம்

அயோத்தி:  ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள முஸ்லிம்களின் கல்லறை மீதா ராமர் கோயிலை கட்டப் போகிறீர்கள்?’ என ராமர் கோயில் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேலும், ராமர் கோயிலை கட்டுவதற்காக 3 மாதங்களுக்குள்  அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கும்  உத்தரவிட்டது. அதன்படி, கோயில் கட்டுவதற்காக கடந்த 4ம் தேதி 15 உறுப்பினர்களை கொண்ட ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் பிரதமர் மோடி அறக்கட்டளை அமைத்துள்ளார். இந்நிலையில், இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 1885ம் ஆண்டு அயோத்தியில் நடந்த வன்முறையின்போது 75 முஸ்லிம்கள் உயிரிழந்தனர்.

முஸ்லிம்களால் கன்ஜ் ஷாகிதான் என அழைக்கப்படும் இறந்தவர்களின் கல்லறைகள் அமைந்துள்ள மயானமானது,  இடிக்கப்பட்ட பாபர் மசூதியை சுற்றிதான் அமைந்துள்ளது. முஸ்லிம்களின் இடுகாட்டினை ராமர் கோயிலை கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பான  விவகாரத்தை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இது தர்மத்தை மீறிய செயலாகும். சனாதன தர்மத்தை பார்க்கும்போது முஸ்லிம்களின் கல்லறை மீதான அடித்தளத்தை கொண்டு ராமர் கோயிலை கட்ட முடியுமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இது அறக்கட்டளை நிர்வாகம் எடுக்க வேண்டிய ஒரு முடிவாகும். ராமர் மீது கொண்டுள்ள மரியாதை காரணமாக, இடிக்கபட்ட மசூதியை சுற்றியுள்ள முஸ்லிம்களின் கல்லறைகள் அமைந்துள்ள 4 முதல் 5 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Muslims ,Senior Advocate ,Supreme Court ,Senior Advocate of Letters , Letter to Muslims, Cemetery, Temple, Supreme Court, Senior Advocate
× RELATED சிஏஏ சட்ட விதிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் கேரளா வழக்கு