×

‘காணவில்லை’ புகார் மீது வழக்கு பதியாமல் அலைக்கழித்த போலீசார் விபத்தில் இறந்தவருக்கு இறுதி சடங்கு கூட செய்ய முடியாமல் பரிதவித்த உறவினர்கள்

பெரம்பூர்: ஒருவர் திடீரென மாயமானால், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிவிட்டு, கிடைக்காவிடில், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் புகார்கள் மீது காவல்துறை என்ன நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் என்று பார்த்தால், பல காவல் நிலையங்களில், காணாமல் போனவர்கள் குறித்து வழக்கு பதிவதோடு சரி. அவர்களை கண்டுபிடிப்பதில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.  
குறிப்பாக, 18 வயதிலிருந்து 25 வயதுள்ள ஒரு பெண் காணவில்லை, என காவல் நிலையத்தில் புகார் அளித்தால், போலீசார் கேட்கும் முதல் கேள்வி, ‘‘யாருடன் உங்களது பெண் ஓடிப்போனாள்,’’ என்பதுதான். அதுமட்டுமின்றி, ‘‘ஓரிரு நாளில் உங்களது பெண் யாரையாவது திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவாள். நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்,’’ என்று கூறி அனுப்பி விடுகின்றனர். 10 வழக்குகளில் 8 வழக்கு இதுபோன்று நடப்பதுண்டு. மீதமுள்ள 2 வழக்குகளில் காணாமல் போன பெண் என்ன ஆனார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். முதியவர்கள் மாயமானால், மறதியால் எங்காவது சென்று இருப்பார்கள் எனக்கூறி, வழக்கு பதிவு செய்வதில்லை. ஒன்றுக்கு 10 முறை நடையாக நடந்தால் மட்டுமே இதுபோன்ற புகார்களுக்கு போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.

இதையடுத்து, காணாமல் போனவரின் புகைப்படத்தை காவல் நிலையத்தில் வெளியே உள்ள அறிவிப்பு பலைகையில் ஒட்டிவிட்டு, மற்ற காவல் நிலையங்களுக்கும் அந்த புகைப்படங்களை அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டால், வேலைப்பளு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால், இதுபோன்ற வழக்குகளுக்கு முக்கியத்துவம் தர முடிவதில்லை, என கூறுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் கொடுங்கையூரில் நிகழ்ந்துள்ளது. கொடுங்கையூர் அபிராமி அவென்யூ 16வது தெருவைச் சேர்ந்தவர் தெய்வானை (48). இவரது தங்கை விஜயலட்சுமி. இவர்களின் தந்தை முத்துவேல் (70), மணலியில்  உள்ள கன்டெய்னர் குடோனில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, தந்தையை காணவில்ைல என முத்துவேலின்  மகள் தெய்வானை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் மீது வழக்கு பதிவு செய்யாத போலீசார், பல்வேறு காரணங்களை கூறி இப்போது வா, அப்போது வா என 5ம் தேதி வரை அலைக்கழித்துள்ளனர். நாளிதழில் விளம்பரம் செய்வதற்கு எப்ஐஆர் நகல் வேண்டும் என பலமுறை நடையாக நடந்த பிறகே, போலீசார் புகாரை பெற்றுக்கொண்டனர்.
ஆனால், 10 நாட்கள் கழித்து 15ம் தேதி தான் எப்ஐஆர் நகல் கொடுத்துள்ளனர். இதனால் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், முத்துவேலின் மகளை தொடர்புகொண்ட போலீசார், உடனே காவல் நிலையம் வரும்படி கூறியுள்ளனர்.
அதன்படி, சென்று பார்த்தபோது, ஒரு சடலத்தின் புகைப்படத்தை காண்பித்து, இது உங்கள் தந்தையா என பார்த்து சொல்லுங்கள், என கூறியுள்ளனர். அப்போது, அந்த சடலம் தனது தந்தை முத்துவேல் என்பதை தெய்வானை உறுதிப்படுத்தியுள்ளார்.விசாரணையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற 2ம் தேதி, முத்துவேல் கடற்கரை ரயில் நிலையம் அருகே, ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. அவரது உடல் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தை தேடி யாரும் வராததால், கடந்த 16ம் தேதி மூலக்கொத்தளம் சுடுகாட்டில் புதைத்துள்ளனர். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார், முத்துவேலின்  குடும்பத்தினரிடம் கூறியபோது, அவரது மகள் தெய்வானை காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். காவலர்கள் அவரை தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபற்றி முத்துவேலின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘தந்தை காணாமல் போன 2ம் தேதி தேதி நாங்கள் புகார் கொடுத்தோம். ஆனால் 15ம் தேதி தான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட, நகல் வழங்கப்பட்டது. சிறிது முன்னதாகவே கொடுத்து இருந்தால் நாங்கள் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்திருப்போம். குறைந்தபட்சம் எங்களது தந்தையின் உடலையாவது மீட்டு  அடக்கம் செய்து இருப்போம். தற்போது அதற்கும் வழியில்லாமல் ஆகிவிட்டது,’’ என கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுபற்றி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘ஊர் பெயர் தெரியாத உடல்களை குறைந்தபட்சம் 7 நாட்கள் மட்டுமே நாங்கள் வைத்திருப்போம். அதன் பிறகு சம்பந்தப்பட்ட காவல்துறை வட்டாரத்தில்  சொல்லி அந்த உடலை புதைத்து விட சொல்வோம். ஏனென்றால் தொடர்ந்து அதிகப்படியான உடல்களை சேமித்து வைக்கும் அளவிற்கு  இடம் இல்லை. காவல் துறையினர் அறிவுறுத்தினால்  அதிகபட்சம் 15 நாட்கள் வரை வைத்திருப்போம். அதன் பிறகு அப்புறப்படுத்தி விடுவோம்,’’ என்றனர்.

புகார் அளித்தபோதே வழக்கு பதிந்து உறவினர்களிடம் எப்ஐஆர் நகல் வழங்கி இருந்தால், மற்ற காவல் நிலையங்களுக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி விசாரித்து இருந்தால், அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள சடலங்களுடன் ஒப்பிட்டு பார்த்து இருந்தால், முத்துவேலின் சடலம் அவரது குடும்பத்தினருக்கு  கிடைத்திருக்கும். ஆனால், போலீசாரின் அலைக்கழிப்பால் தந்தையின் சடலத்தை கூட பார்க்க முடியாமல் மகள்கள் கதறும் நிலை ஏற்பட்டுள்ளளது. இனிமேலாவது, போலீசார் இதுபோன்ற வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க வேண்டும், இல்லையென்றால் காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களாகவே  கடைசிவரை இருப்பார்கள், என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags : Relatives ,complainant ,funeral ,deceased , Relatives of the deceased ,perform the funeral , deceased.
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...