மக்கள் போராட்டத்தை ஒடுக்க இது ஒன்றும் இந்தியா அல்ல : பாகிஸ்தான் நீதிபதி ஆவேசம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் செயல்படும் பஷ்துன் தகாபஸ் இயக்கத்தின் தலைவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான எப்ஐஆரில், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்திருந்த தேசத் துரோக வழக்கு நீக்கப்பட்டு, தீவிரவாத தடுப்பு சட்டம் சேர்க்கப்பட்டு இருப்பதாக கடந்த 2ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அதார் மினல்லா அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் விலக்கிக் கொள்ளப்படுவதாக இஸ்லாமாபாத் துணை ஆணையர் ஹம்சா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, இஸ்லாமாபாத் நிர்வாகம் போராட்டக்காரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்றதால், இது தொடர்பான மனுக்கள் பயனற்றதாகி விடுகிறது. இதனால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது,’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கு ஏன் திரும்பப் பெறப்பட்டது என்று இஸ்லாமாபாத் தலைமை நீதிபதி நேற்று விளக்கம் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்க கூடாது. இதனை நீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை. விமர்சனங்களை கண்டு நாம் அஞ்சக் கூடாது. மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாக்கும். ஒவ்வொருவரின் அரசியலமைப்பு உரிமைகளும் பாதுகாக்கப்படும். இது பாகிஸ்தான், இந்தியா அல்ல. போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி அதார் மினல்லா உத்தரவிட்டார்.

Related Stories: