புதிய தலைமைக்கான பிரசாரம்: பீகார் முதல்வர் நிதிஷை கவிழ்க்க களமிறங்கினார் பிரசாந்த் கிஷோர்

பாட்னா: அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக சமீபத்தில் பதவியேற்றார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அவருக்கும், கட்சி தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார்.    சில நாட்கள் அமைதியாக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது முதல் முறையாக, நிதிஷ் குமாரை கவிழ்க்க தீவிரமாக களமிறங்கி உள்ளார்.

இதற்காக அவர் ‘பாத் பீகார் கி’ (பீகார் பற்றி பேசுவோம்’) என்ற பிரசாரத்தை அறிவித்துள்ளார். இதன் நோக்கம் நாட்டின் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக பீகாரை வளர்ச்சி அடைய வைப்பது, அதற்கான தகுதிவாய்ந்த புதிய தலைமையை தேடுவது என்பதாகும். இந்த பிரசாரம் நாளை முறைப்படி தொடங்கி வைக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் அடுத்த 100 நாட்கள் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். அப்போது, புதிய தலைமையை வேண்டிடும் மக்களை குறிப்பாக இளைஞர்களை ஒன்று திரட்ட இருப்பதாக அவர் கூறி உள்ளார். இது ஆளும் பீகார் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 15 ஆண்டில் பீகாரில் வளர்ச்சி இருந்திருக்கிறது. ஆனால், அதன் வேகம் வேண்டிய அளவுக்கு இல்லை. பீகார் வளர்ச்சிக்காக நிதிஷ் குமார் என்ன செய்தார், அடுத்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வென்றால் என்ன செய்வார்கள் என மக்கள் கேட்கிறார்கள். மாநில வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்களுடன் பொது மேடையில் முதல்வர் நிதிஷுடன் விவாதம் நடத்த நான் தயார். அவர் வருவாரா? எனக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையேயான உறவு அரசியலை தாண்டியது.

என்னை அவர் மகன் போல் நடத்தினார். என்னை கட்சியிலிருந்து நீக்கியது அவருடைய விருப்பம். அதை கேள்வி கேட்கவில்லை. ஆனால், காந்திய கொள்கையிலிருந்து தவறாத கட்சி என கூறிக் கொள்ளும் நிதிஷ் குமார், கூட்டணிக்காக எப்படி கோட்சேவை ஆதரிக்கும் பாஜவுடன் இணைய முடியும்? அதை்தான் கேட்டேன்’’ என்றார்.

Related Stories: