நெய்யாறு நீர் பங்கீடு விவகாரம்: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நெய்யாறு நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு அசல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நேற்று உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம் கேரள மாநிலத்துடன் இருந்த போது உருவாக்கப்பட்டது தான் நெய்யாறு கால்வாய் திட்டம். இதில் கேரளாவை ஒட்டியுள்ள விளவங்கோடு தாலுகா பகுதி கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதி என்பதால் அங்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டு கேரள அரசு திடீரென ஒரு புதிய சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அதில்,கேரள மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கோ அல்லது யூனியன் பிரதேசங்களுக்கோ தண்ணீர் தர வேண்டும் என்றால் அதற்கான தீர்மானம் ஒன்றை கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

அதன் பின்னர் அத்தீர்மானத்தின் படி ஒரு ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் கேரள அரசு ஏற்படுத்தியவுடன் தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கடந்த 2004 ஜனவரி மாதத்தில் திடீரென தமிழகத்தின் குமரி மாவட்டத்திற்கு தரப்பட்டு வந்த நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீரை கேரள அரசு நிறுத்தியது. இதனால் விளவங்கோடு பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நெய்யாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என கேரள மாநிலத்திற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து வழக்கு தொடர்பான குறுக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது.

  இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் வளாகத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘நெய்யாறு நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தற்போது தாக்கல் செய்துள்ள நகல் ஆவணங்கள் தெளிவாக இல்லை என்பதால், அது தொடர்பான ஒரிஜினல்(அசல்) ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories: