×

கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் தாமதத்தால் 3 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: திருவாரூர் விவசாயிகள் வேதனை

திருத்துறைப்பூண்டி: திருவாரூரில் 3 லட்சம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த ஆண்டு 37 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. ஜனவரியில் பெய்த மழையால் கதிர்கள் சாய்ந்து, வயல்களில் தண்ணீர் நின்றதால் அறுவடை தொடங்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் 80 சதவீதம் அறுவடை முடிந்து உள்ளது. இந்த ஆண்டு அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தாலுகா முழுவதும் 58 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு கொள்முதல் நிலையத்தில் 800 முதல் 1000 நெல் மூட்டைகள் வரை பிடிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய முடியாமல் அடுக்கி வைத்துள்ளனர். தினந்தோறும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்திட வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

இதுகுறித்து திருப்பதூர் விவசாயி கோவிந்தாஜ் கூறியதாவது:  பல பிரச்னைகளுக்கு பிறகு அறுவடை செய்தால் அந்த நெல் மூட்டைகளை விற்க முடியாமல் அவதிப்பட வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியாததால் நெல் மூட்டைகளை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்தில் குறைந்தது 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சுமார் 3 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யபடாமல் உள்ளது.  நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இடம் இல்லாததால் வீடுகளில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்து உள்ளனர். மேலும் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்பட்ட தலா 1000 நெல் மூட்டைகள் வீதம் திறந்த வெளி சேமிப்பு கிடங்குக்கு எடுத்து சொல்லாமல் உள்ளது. இதனால் கொள்முதல் செய்யாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். எனவே விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : procurement centers ,rice plants ,Thiruvarur ,Thiruvarurur , Procurement centers, paddy bundles, farmers in Thiruvarur
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...