உசேன் போல்டாவது... நட்டாவது... கம்பளாவில் சீனிவாஸ் கவுடாவின் சாதனையை முறியடித்தார் நிஷாந்த்: 143 மீட்டர் தூரத்தை 13.61 விநாடியில் கடந்தார்

பெங்களூரு: கர்நாடகாவின் மங்களூரு மாவட்டத்தில் நடந்த கம்பளா போட்டியின்போது அவ்சதாபுராவைச் சேர்ந்த சீனிவாஸ் கவுடா என்பவர் 142.50 மீட்டர் தூரத்தை 13.62 விநாடியில் கடந்தார். இதுவரை இந்த தூரத்தை இவ்வளவு குறுகிய நேரத்தில் யாரும் கடந்தது இல்லை. இது தவிர உலக ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்டின் 100 மீட்டர் ஓட்ட பந்தய சாதனையை சீனிவாஸ் கவுடா, இந்த கம்பளா போட்டியின்போது 9.55 விநாடியில் கடந்து முறியடித்தார். இதனால் மாநில மக்கள் அனைவரும் அவரை கர்நாடக உசேன் போல்ட் என்று வர்ணித்து புகழாரம் சூட்டினர்.  மேலும், மாநில அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் இவருக்கு பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் தரப்பில் கூட, சீனிவாஸ் கவுடாவின் திறமையை பார்த்து, அவர் 100 மீட்டர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு, மத்திய விளையாட்டு துறை சார்பில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உடுப்பி மாவட்டம் அருகே பண்ட்வால் தாலுகாவை அடுத்த வேணூர் பகுதியில் நடந்த கம்பளா போட்டியில், சீனிவாஸ் கவுடாவின் சாதனையை நிஷாந்த் ஷெட்டி என்ற வாலிபர் முறியடித்தார். முன்னதாக பிப்.1ம் தேதி நடந்த கம்பளா போட்டியின்போது சீனிவாஸ் கவுடா 142.50 மீட்டர் தூரத்தை 13.62 விநாடி நேரத்தில் கடந்தார். ஆனால் நேற்று முன்தினம் நடந்த கம்பளா போட்டியில் நிஷாந்த் ஷெட்டி 143 மீட்டர் தூரத்தை 13.61 விநாடியில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சீனிவாஸ் கவுடாவின் சாதனையை நிஷாந்த் ஷெட்டி முறியடித்துள்ளார். இதுகுறித்து உடுப்பி மாவட்டம் பஜகோல் பகுதியை சேர்ந்த கம்பளா வீரர் நிஷாந்த் ஷெட்டி கூறும்போது: எருதுகள் ஓடிய வேகத்திற்கு நான் ஒத்துழைப்பு கொடுத்து ஓடியதால் இந்த தூரத்தை கடக்க முடிந்தது.

அதே  நேரத்தில் கம்பளா வீரர் சீனிவாஸ் கவுடா ஏராளமான பதக்கங்கள் பெற்றுள்ளார். அவரை யாராலும் முறியடிக்க முடியாது. தற்போது 143 மீட்டர் தூரத்தை 13.61 விநாடியில்  கடந்திருப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன். இதேபோன்று ஏராளமான கம்பளா வீரர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள் தென்கர்நாடகா மாவட்டத்தில் உள்ளனர். அவர்களை மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும். நான் பெற்ற இந்த வெற்றி மற்றும் எனக்கு கிடைத்த பெருமையை கன்னட மக்களுக்கே ஒப்படைக்கிறேன் என்றார்.

Related Stories: