தகுதி நீக்கம் செய்வது உள்ளிட்ட தேர்தல் சீர்த்திருத்தம் குறித்து ஆணையம் புதிய பரிந்துரை

புதுடெல்லி: பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தந்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது உள்ளிட்ட தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய பரிந்துரைகளை சட்ட அமைச்சகத்திடம் வழங்கி உள்ளது. தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென பல ஆண்டாக கோரிக்கை இருந்து வருகிறது. இதில் மிக முக்கியமாக, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டுமெனவும் அதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆதார் எண் சேர்க்கப்படும் போது அதன் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக  சட்ட அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது. இதுதொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுனில் சந்திரா ஆகியோருடன் சட்ட அமைச்சக உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில், தேர்தல் ஆணையம் தரப்பில் மேலும் பல்வேறு புதிய சீர்த்திருத்தங்கள்  தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கான வயது தகுதி ஜனவரி 1ம் தேதியை மட்டுமே கொண்டு கணக்கிடப்படுகிறது. இது கூடுதலாக மேலும் சில தேதிகளை இணைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு, வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை தந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும். தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் காலத்தில் ஊழல் செய்பவர்களை வாரன்ட் இன்றி கைது செய்யும் அதிகாரம் வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களுக்கும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: