பக்கத்து வீட்டுக்காரரை சுட்டுத்தள்ள காவல் நிலையத்தில் நுழைந்து ஏகே-47 திருடிய தொழிலாளி: 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்

சங்கரெட்டி: தெலங்கானாவில் சித்திபேட் நகரை அடுத்த அக்கன்னாபேட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி தேவுனி சதானதம். இவர் தனது பக்கத்து வீட்டுக்காரருடன் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட தகராறின் போது, வீட்டில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை எடுத்து வந்து அவரை நோக்கி சுட்டார். அதிர்ஷ்ட வசமாக, துப்பாக்கி குண்டுகள் சுவரை மட்டுமே துளைத்தன. இதையடுத்து, தேவுனி அங்கிருந்து தப்பிவிட்டார். அவரை தேடிப்பிடித்து கைது செய்து விசாரித்த போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில், பக்கத்து வீட்டுக்காரருடன் அவ்வபோது உண்டாகும் சிறிய தகராறால்  அடிக்கடி அஸ்னாபேட் காவல் நிலையத்துக்கு வரும் வழக்கம் இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அப்படியொரு நாள் அதிகாலை வந்த போது, காவலர்கள் யாரும் இல்லாததால், ஆயுதங்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து துப்பாக்கிகளை திருடியதாகவும் தேவுனி கூறியுள்ளார்.

இது குறித்து சித்திபேட் ஆணையர் ஸ்வேதா கூறுகையில், ``3 ஆண்டுகளுக்கு முன், ஹோலி பண்டிகை தினத்தன்று, அதிகாலை 4 மணியளவில் காவல் நிலையத்துக்கு வந்த தேவுனி, காவலர் யாரும் இல்லாததைக் கண்டு, அங்கு ஆயுத அறையில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. ரக துப்பாக்கி, கார்பன் ரைபிளை எடுத்து கொண்டு சென்றுள்ளார். ஆயுதங்களை காணவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, தேவுனியிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: