ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு ப.சிதம்பரம் கேட்ட ஆவணத்தை வழங்கும்படி சிபிஐ.க்கு உத்தரவு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திடம் குற்றப்பத்திரிகையுடன் சில ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2007ம் ஆண்டில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடாக ரூ.305 கோடியை முறைகேடாக பெற்று தர வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்ததாக சிபிஐ கடந்த 2017ம் ஆண்டு மே 15ம் தேதி வழக்கு பதிவு செய்தது. இந்த நிதியை பெற ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் உதவியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்து சிபிஐ விசாரித்தது. இதேபோல், அமலாக்கத்துறையும் தனியாக அவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து கடந்த அக்டோபர் 16ல் அவரை கைது செய்தது.

இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு கடந்த அக்டோபர் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தொடாந்து அமலாக்கத் துறை வழக்கில் 105 நாள் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி  உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் விடுதலையானார். கார்த்தியும் இரு வழக்குகளிலும் ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் நேற்று, குற்றப்பத்திரிகையுடன், சில ஆவணங்களை கேட்ட ப.சிதம்பரத்துக்கு, அதை வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹர்  உத்தரவிட்டார்.

Related Stories: