அரசு பங்களாவை தக்க வைக்கவும் பாதுகாப்பு கருதியும் பிரியங்காவை ராஜ்யசபா எம்பியாக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிரம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் பாதுகாப்பு கருதியும் அரசு விடுதிகளை பயன்படுத்த வசதியாகவும் அவரை மாநிலங்களவை எம்பியாக்க பல மாநிலங்களில் இருந்து விருப்ப மனுக்கள் கட்சி தலைமைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் மிக முக்கிய விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், பிரதமர், முன்னாள் பிரதமர், அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தற்போதைய இடைக்காலத் தலைவர் சோனியா, காங்கிரஸ் ெபாதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு இந்த உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது. எனினும், அவர்களுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் வழங்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது எம்பிக்களாக உள்ள சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மத்திய அரசின் விடுதியை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 1997ம் ஆண்டு முதல் மத்திய அரசின் டெல்லி லோதி எஸ்டேட் பங்களாவில் பிரியங்கா காந்தி இருக்கும் நிலையில், அவருக்கான எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ தங்குமிடத்தை காலி செய்ய மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர்கள் மட்டுமே மேற்கண்ட விடுதியில் தங்கமுடியும். ஆனால், இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளவர்கள் அரசாங்க விடுதியில் தங்கும் உரிமை இல்லை. அதனால், பிரியங்கா காந்தியை மாநிலங்களவை உறுப்பினராக்கும் யோசனையை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் முன்வைத்துள்ளனர். அவ்வாறு பிரியங்கா எம்பி ஆகிவிட்டால், மேற்கண்ட பங்களாவையே தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

எனவே, பல மாநிலங்களைச் சேர்ந்த  காங்கிரஸ் தலைவர்கள், பிரியங்கா காந்தியின் பெயரை முன்மொழிந்து  வேட்புமனுக்களை கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர். குறிப்பாக மத்திய  பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா,  கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து விருப்ப மனுக்கள் வந்துள்ளதாக  கட்சியின் டெல்லி மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். வரும் ஏப்ரலில் மாநிலங்களவை தேர்தல் நடக்கவுள்ளதால் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து பிரியங்கா காந்தி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘பிரியங்கா காந்தியை மாநிலங்களவைக்கு தேர்வு செய்வது குறித்து, ஏற்கனவே கட்சிக்குள் கோரிக்கை இருந்தது.

ஆனால், இவ்விஷயத்தில் சோனியா மற்றும் கட்சி தான் முடிவெடுக்க முடியும். மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கி உள்ளது’’ என்றார். இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘‘யூகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கட்சிக்குள் மற்ற தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி நாங்கள் கருத்துத் தெரிவிக்க முடியாது” என்றார்.

Related Stories: