நீதிமன்றம் தங்களை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை: திட்டமிட்டப்படி நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம்...இஸ்லாமிய கூட்டமைப்பு திட்டவட்டம்

சென்னை: நாளை திட்டமிட்டபடி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில்  வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, சட்டமாகவும் முழுவடிவம் பெற்றது. நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு  வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின. தெலங்கானா மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதற்கிடையே, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் நாளை பிப்ரவரி 19ம் தேதி சட்டபேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர். இதற்கு தடை விதிக்ககோரி  கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போராட்டம் நடத்தவுள்ள நடைமுறைகளை பின்பற்ற தவறியதால் சட்டப்பேரவை  முற்றுகையிடும் போராட்டத்திற்கு மார்ச் 11-ம் தேதி வரை தடை விதித்தது. மேலும், மனு தொடர்பாக 4 வார காலத்திற்குள் மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், காவல்  ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

போராட்டத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், மவுண்ட் ரோடு மக்கா மஸ்ஜித்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் காஜா மொய்தீன், திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், போராட்டத்திற்கு தடை விதித்துள்ள வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றத்தின் தடை தங்களுக்கு பொருந்தாது என்றும் தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார். சட்டபேரவை நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: