காவிரி படுகை வேளாண் மண்டல அறிவிப்பு; அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை... 20ம் தேதி சட்டசபையில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

சென்னை: காவிரி படுகை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், நாளை அவரது தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வரும் 20ம் தேதி சட்டசபையில் காவிரி படுகையை வேளாண் மண்டலமாக்கும் சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி படுகையை 2 மண்டலங்களாக பிரித்து, 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்தாண்டு அனுமதி வழங்கியது. ஓஎன்ஜிசி, வேதாந்தா, ஐஓசி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான 5வது ஏலத்துக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 15ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 19,789 சதுர கிமீ பரப்பளவில் 11 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமம் இந்த ஏலத்தில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சேலம் தலைவாசல் அருகே கடந்த 9ம் தேதி நடந்த விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதற்காக சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் சட்டம் கொண்டு வருவது குறித்து வேளாண் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஆனாலும் காவிரி படுகையில் நடந்து வந்த ஹைட்ரோ கார்பனுக்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தப்படாததால், விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் கடந்த 14ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது. 20ம் தேதியுடன் இந்த கூட்டம் நிறைவடைய உள்ளது. இந்த கூட்ட தொடரிலேயே, சிறப்பு வேளாண் மண்டலத்துக்கான சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் நாளை (19ம் தேதி) மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

2021 சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு இந்தக்கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், இந்த சட்டமசோதா கூட்டத்தொடரின் கடைசி நாளான 20ம் தேதி(நாளைமறுநாள்) தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு  தேர்தல் நடத்துவது குறித்தும் இதில் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. இதுதவிர ஏப்ரல் 2வது வாரத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டி உள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வகையிலும், சட்டம், ஒழுங்கு பிரச்னை பாதிக்காத வகையிலும் கணக்கெடுப்பை நடத்தவது பற்றி ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: