காட்டு யானைகளை விரட்ட ஒத்துழைக்க மறுக்கும் ஆந்திர வனத்துறை: இருமாநில உயர்அதிகாரிகள் பேசி தீர்வு காண கிராம மக்கள் கோரிக்கை

வேலூர்: காட்பாடி அருகே ஆந்திர எல்லைக்குள் தற்போது முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை கவுண்டன்யா சரணாலயத்துக்கு விரட்டுவதில் ஆந்திர வனத்துறையினர் முரண்டுபிடிப்பதாகவும், இவ்விஷயத்தில் இருமாநில உயர்அதிகாரிகள் பேசி உரிய தீர்வு காண இருமாநில கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம் வனப்பகுதியிலும், மற்றொரு குழு காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், ஆந்திர எல்லையான சித்தப்பாறை மற்றும் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரிந்தன. அங்கிருந்து வெளியேறிய 14 யானைகளை கடந்த 15ம் தேதி இரவு லத்தேரி அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா தலைமையில் வனச்சரகர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை யானைகள் கூட்டத்தை ராஜாதோப்பு, மோர்தானா வழியாக கவுண்டன்யா வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில், யானைகள் கூட்டம் மீண்டும் பள்ளத்தூர் கிராமத்தில் நுழைந்தன. பள்ளத்தூர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் அவை நேற்று அதிகாலையில் முகாமிட்டிருந்தன. இந்த நிலையில் அங்கிருந்த யானைகள் மெல்ல மெல்ல ஆந்திர மாநிலம் கவுண்டன்யா வனத்துக்குள் நுழைந்தன. அங்கு அவை இருமாநில எல்லையை ஒட்டிய பகுதியில் நடமாடி வருகின்றன. தற்போது தமிழக-ஆந்திர எல்லையான சித்தப்பாறை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை ஆந்திர வனத்துறையினர் தமிழகத்துக்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையில் இருமாநில வனத்துறையினர் இணைந்து யானைகள் கூட்டத்தை பரதராமி வழியாக பலமநேர் கவுண்டன்யா சரணாலயத்துக்கு விரட்டி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

ஆனால் ஆந்திர மாநில வனத்துறையில் கீழ்நிலை அதிகாரிகள், உயர்அதிகாரிகளின் முடிவுக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர். அவர்கள் ஆந்திர எல்லையோர கிராம மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழக பகுதிக்குள் யானைகளை விரட்டுவதிலேயே குறியாக உள்ளதாகவும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் விருப்பமின்றி உள்ளதாகவும் தமிழக வனத்துறையினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து அங்குமிங்கும் இடம்பெயர்ந்து வரும் யானை கூட்டத்தால் பள்ளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால் யானைகள் கூட்டம் ஊருக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்யாமல் இருக்க வேலூர் வனச்சரகர் மூர்த்தி தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் 15ம் மேற்பட்டவர்கள் கிராம மக்களுடன் கைகோர்த்து தீவிரமாக கண்காணித்து வருவதுடன் வெடிகள் வெடித்தபடியும், சத்தம் எழுப்பியும் அவற்றை கவுண்டன்யா வனப்பகுதிக்குள் முழுமையாக விரட்டும் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: