×

வரம்பு மீறி ஆட்டம்போடும் இளைய தலைமுறை குடும்பங்களை சீரழிக்கும் டிக்டாக் மோகம்: குற்றங்களும் அதிகரிக்கும் அபாயம்

நெல்லை: நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியான டிக்டாக் மோகத்தால் பலரது குடும்ப வாழ்க்கை சீரழிந்து வருகிறது. வரம்பு மீறி டிக்டாக்கில் ஆட்டம் போடும் இளைய தலைமுறையால் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியாக ஸ்மார்ட் போனும், அதில் வரும் பல்வேறு சேவைகளில் ஒன்றாக டிக்டாக்கும் கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒருவர் தனது அசாத்திய நடிப்பினால் வெளியுலகிற்கு முகம் காட்ட வேண்டுமெனில் சினிமா ஒன்றையே ஆயுதமாக பயன்படுத்த முடிந்தது. உள்ளூர்வாசிகள் தங்கள் முகபாவனைகளை பயன்படுத்தி நாடகங்களை பயன்படுத்தி வந்தனர். ஸ்மார்ட்போன்களின் வருகையும், வளர்ச்சியும் சாதாரண மனிதர்களும் கதாநாயகத்துவம் பெறும் நிலைக்கு மாறியது. ஒரு சாதாரண விவசாயி தனது வயலில் நெல் விளைவிப்பதையும், தண்ணீர் பாய்ச்சுவதையும் கூட வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக் என பதிவேற்றம் செய்து பலருக்கு காட்சிப்படுத்த முடிகிறது.

சமூகவலைத்தளங்களில் அழகு பதுமைகளின் உல்லாச பூமியாக உலாவரும் டிக்டாக்கில் தினமும் தேவதைகளின் ஆடல், பாடல்களும், நளினங்களும் பலரையும் கவர்ந்திழுக்கின்றன. இளைய தலைமுறையை சேர்ந்த பெண்களில் பலருக்கு, தங்கள் அழகை ஆராதிக்க வேண்டும் என்ற ஆவல் உந்தி தள்ள, அவர்கள் டிக்டாக்கில் வண்ண, வண்ண படங்களையும், அதனோடு இயைந்த பாடல்களையும், நடனங்களையும் பதிவேற்றம் செய்கின்றனர். விளைவு அவர்களுக்கு லைக்குகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி வருகிறது. தங்களை பின்தொடர்வோரின் பேச்சும், நட்பும் பெண்களை வேறொரு உலகிற்கு இழுத்து செல்கிறது. அதன் விளைவு ஆசைகளும், ரசனைகளும் விஸ்தாரம் அடையும்போது குற்றச்சம்பவங்களும் பின்விளைவுகளாய் தொடர்கின்றன. தமிழகத்தில் சமீபகாலமாக எழும் கொலை, ஈவ்டீசிங், பெண்கள் அவதூறு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளின் பின்னணியில் டிக்டாக்கின் செயல்பாடு அதிகளவில் உள்ளது.

காவல்துறையில் டிக்டாக் மூலமே தங்கள் பழக்கம் ஏற்பட்டது எனவும் அல்லது டிக்டாக் காரணமாக இச்சம்பவமே நிகழ்ந்தது என ஒப்புதல் வாக்குமூலம் அடிக்கடி தரப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட டிக்டாக் மோகத்தால் திசைமாறிய மனைவியை கணவரே அடித்து கொன்ற சம்பவம் பண்ருட்டியில் நிகழ்ந்தது. டிக்டாக்கால் குடும்பத்தை கவனிக்காமல் ஆண்களுடன் சுற்றி திரிந்த மனைவியை இரும்பு ராடால் அடித்து கொன்றதாக கணவர் வாக்குமூம் அளித்துள்ளார். தேனிமாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் சுகந்தி என்ற பெண் ஆபாச பாடல்களுக்கு டிக்டாக்கில் ஆட, அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களை தொட்டது. வீடியோக்களை பதிவிடுவதில் சுகந்திக்கும், மற்றொரு இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறில் சுகந்தியை தாறுமாறாய் கிழித்த இளைஞர், அவரை மட்டுமின்றி, அவரது ஊர் பெண்களையுமே காட்டமாக விசாரித்தார். இதன் விளைவு அவ்வூர் மக்கள் சுகந்தியை ஊரை விட்டே விலக்கி வைத்தனர். அப்பெண் ஊருக்குள்ளே வரக்கூடாது என காவல்துறையில் புகார் அளித்தனர்.

சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு டிரைவர், டிக்டாக் மோகத்தால் திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணை கைபிடித்தார். ஆனால் அதற்காக கட்டிய மனைவியை அவர் கைவிட்டதுதான் சோகத்திலும் சோகம். ‘என் வாழ்க்கையே டிக்டாக்கால் நாசமாக போச்சு. தயவு செய்து டிக்டாக்கை தடை செய்யுங்க’ என பாதிக்கப்பட்டவரின் மனைவி புகார் அளித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகின்றன. 10 வயது சிறுமிகளும் டிக்டாக் மோகத்தால் அதையே அடிக்கடி பார்த்து கொண்டிருப்பதால் அவர்களது படிப்பு பாழாகி வருவதாக கல்வியாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர். டிக்டாக்கில் எவ்வளவோ நல்ல விஷயங்களும் இடம் பெறுகின்றன. பலர் தங்கள் சாதனைகளையும், உழைப்பின் அவசியத்தையும், தங்களின் சமூக ஆதங்கத்தையும்  வெளிப்படுத்த அதையொரு சமூக ஊடகமாக பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இளைய தலைமுறை டிக்டாக் மோகத்தால் தங்கள் வாழ்க்கை பாதையை மெல்ல மெல்ல திசை திருப்பி கொண்டிருப்பது சமூகத்தை கவலைக்குள்ளாக்குகிறது.

Tags : families ,generation families , Dicktag lust, crime, danger
× RELATED ‘டிக்டாக்’ பழக்கத்தால் விபரீதம்: பெண் கழுத்தை நெரித்து கொலை