×

வடிவேலு படத்தின் காமெடி பாணியில் குளச்சலில் காதலனை மாற்றிய இளம் பெண்: பஞ்சாயத்தை முடிக்க முடியாமல் போலீசார் திணறல்

குளச்சல்: கருங்கல் அருகே மிடாலத்தை சேர்ந்தவர் அஜின் (23 பெயர் மாற்றம்) குளச்சல் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி கட்டிடத்தில் பரிசு பொருள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளூரில் வாடகைக்கு குடியிருக்கும்  இளம் பெண் ரசிகா (22 பெயர் மாற்றம்) அடிக்கடி வந்து சென்றார். அப்போது அஜின்-ரசிகா இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. ரசிகாவுக்காக பணத்தை வாரி இறைந்த அஜின், கண்மூடித்தனமாக காதலித்தார். காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரசிகா அஜினை விட்டு விலக தொடங்கினார். அஜின் ஆசையாய் செல்போனில் அழைத்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இதனால் உடைந்து போன அஜின், ரசிகா குறித்து தீவிர விசாரணையில் இறங்கினார்.

அப்போது ரசிகா அஜினை கழற்றி விட்டு விட்டு குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள இன்னொரு இளைஞரான ரிசாந்தை (பெயர் மாற்றம்) காதலிப்பது தெரியவந்தது. அதன்படி நேற்று முன்தினம் ரிசாந்த், ரசிகாவின் வீட்டில் இருப்பதை அஜின் தெரிந்து கொண்டார். உடனே ஆத்திரத்தில் அங்கு விரைந்தார். அப்போது ரசிகாவுடன் ரிசாந்த் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார். இது ரசிகாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே அஜின், ரிசாந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. நான் இருக்கும் போது எப்படி? ரிசாந்தை தாக்கலாம் என்று ரசிகா, அஜினிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அருகில் கிடந்த பூரிக்கட்டையை எடுத்து அஜினை சரமாரியாக தாக்கினார். சத்தம் கேட்டு இன்னொரு அறையில் இருந்த ரசிகாவின் தாயார் விரைந்து வந்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ரசிகா தாயாரின் கவரிங் நகை அறுந்து விழுந்தது. அஜின் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை ரசிகா தரப்பினர் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த மோதல் குறித்து அஜின், ரசிகா, ரிசாந்த்  ஆகிய 3 பேரும் குளச்சல் போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரை விசாரித்த போலீசார் வாயடைத்து போய்விட்டனர். வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சி போல் இந்த பிரச்னை இருந்ததால் போலீசாரால் உடனடியாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இறுதியாக ரசிகாவின் மனதில் தான் இல்லை என்பதை அஜின் தெரிந்து கொண்டார். இதையடுத்து ரசிகாவுக்காக செலவு செய்த பணம், கைகலப்பின் போது பறித்ததாக கூறப்படும் நகை ஆகியவற்றை மீட்டு தந்தால் போதும் என்று போலீசாரிடம் முறையிட்டு வருகிறார். அதன்படி போலீசாரும் இரு தரப்பினரிடம் பேசி வருகின்றனர். முடிவு எப்படி வரும் என்பதுதான் தெரியவில்லை. காதலி வீட்டில்  காதலன், மாஜி காதலன் ஆகியோருக்கு இடையே நடந்த கைகலப்பு குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Vadivelu ,film comedy style , Bathing, young woman, cops stuttering
× RELATED கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை