×

திருச்சி அருகே 96 மாடுகளுடன் போலீசில் ஒப்படைக்கப்பட்ட 2 லாரிகள் விடுவிப்பு: போலீஸ் வழக்கு பதியாத மர்மம் என்ன?

தா .பேட்டை: திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே  ஜெம்புநாதபுரத்தில் காவல் நிலையத்துக்கு  அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ஒரு அமைப்பின் பெயரை கூறிக்கொண்டு வந்த சில நபர்கள் 2 டாரஸ் லாரி களை ஒப்படைத்துள்ளனர். லாரிகளில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் பசு மாடுகள்,   கன்றுகள், எருமை மாடுகள் என 96  மாடுகள் ஏற்றப்பட்டு இருந்தது. விசாரணையில் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை பார்த்தபோது மாடுகளை ஏற்றி வந்த லாரிகள் அங்கு இல்லை. இரவே போலீசாரால் விடுவிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து  விவசாய சங்க பொறுப்பாளர் முசிறி கார்த்திக் கூறுகையில்,  விவசாயிகளின் உற்ற தோழனான மாடுகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு சட்டம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனை பின்பற்றாமல் வெளிமாநிலங்களுக்கு மாடுகளை ஏற்றிச் செல்பவர்கள் கால்நடைகளை சித்ரவதை செய்து கொண்டு செல்கின்றனர். இதுபோன்று விதி மீறி மாடுகளை கொண்டு செல்வோரை ஒரு சில சமூக விரோதிகள் தடுத்து நிறுத்தி மிரட்டி பணம் பறிக்கும் செயல் வாடிக்கையாக உள்ளது. மாடுகளை விதிகளை மீறி ஏற்றிச் செல்வோர் மீதும், அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீதும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், விதிகளை மீறி கால்நடைகளை சித்ரவதை செய்து கொண்டு சென்றவர்கள் மீது ஜெம்புநாதபுரம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்கு உரியது மட்டுமல்ல, சட்டத்திற்கு புறம்பான செயலாகும். வாகனத்தில் எத்தனை எண்ணிக்கையில் கால்நடைகளை ஏற்ற வேண்டும், கால்நடைக்கு தேவையான தீவனம், தண்ணீர் ,நீண்ட தூரம் பயணம் என்றால் வாகனத்திலிருந்து கால்நடைகளை கீழே இறக்கி ஓய்வெடுக்க வைத்தல், உடன் கால்நடை மருத்துவர் செல்ல வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளது. இவற்றை பின்பற்றாமல் 2 லாரிகளில் சுமார் 96 மாடுகளை ஏற்றி அவற்றை மூர்க்கத்தனமாக கயிறுகளால் பிணைத்து கொண்டு சென்றது  மனிதாபிமானமற்ற செயலாகும்.

இச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் முறையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மாடுகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவற்றை கோசாலையில் ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது நீதிமன்ற நடுவரின்  உத்தரவை செயல்படுத்தி இருக்க வேண்டும். இதற்கு மாறாக போலீசார் செயல்பட்டது காவல்துறையின் மீதுள்ள நம்பிக்கையை குறைக்கும் விதமாக உள்ளது .காவல்நிலைய தரப்பில் மாடுகள்  விதிமீறி ஏற்றிச் சென்றது குறித்து புகார் இல்லை என்று கூறுகின்றனர் .இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகிறது. மாடுகள் ஏற்றிச்சென்ற லாரியை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்கள் ஏன் புகார் செய்யவில்லை.

போலீசார் தாமாகவே முன்வந்து ஏன் வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே காவல்துறை ஐஜி இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.


Tags : Trichy , Trichy, 96 cow, 2 trucks, freed
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...