×

நடைமுறைகளை பின்பற்றவில்லை: இஸ்லாமிய அமைப்பினரின் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  அதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, சட்டமாகவும் முழுவடிவம் பெற்றது. நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையே கேரள சட்டப்பேரவையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின. தொடர்ந்து, தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதல்  அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வர திமுக தொடர்ந்து வலியுறுத்திய போதும், அது தனது ஆய்வில் உள்ள சபாநாயகர்  தனபால் தெரிவித்தார். இந்நிலையில், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இச்சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற  தமிழக அரசை வலியுறுத்தியும் இஸ்லாமிய அமைப்பினர் நாளை பிப்ரவரி 19ம் தேதி சட்டபேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்திற்கு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு தடை விதிக்ககோரி  கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு தடைவிதிக்க கோரும் மனுவை அவசர வழக்காக இன்று காலை விசாரிக்க கோரிய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் வராகி தொடர்ந்துள்ள வழக்கு  பட்டியலிடப்பட்டு வரும் போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, காவல்துறை சார்பில்,  போராட்டங்களை எப்படி கையாள வேண்டும் என்பது காவல்துறைக்கு தெரியும் என்றும் சென்னையில் முக்கிய இடங்களில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும் அப்படி அளிக்காததால், இவர்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  போராட்டம் நடத்தவுள்ள நடைமுறைகளை பின்பற்ற தவறியதால் சட்டப்பேரவை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மார்ச் 11-ம் தேதி வரை தடை விதித்தனர். மேலும், மனு தொடர்பாக 4 வார காலத்திற்குள் மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, காவல் ஆணையர்,  வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் ஒத்திவைத்தனர்.

Tags : organization ,Chennai High Court ,protests ,Siege of Islamic Assembly , Protest not followed for protest: Siege of Islamic Assembly bans protests Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...