வெடிக்கும் போராட்டங்கள், 6 பேரவை தீர்மானங்கள்.. ஆனாலும் CAA-வை தடுக்க முடியாது: சட்ட வல்லுநர்கள் கருத்து

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் வேறு வகையான சட்டப்போராட்டமும் இதில் விவாதப்பொருளாகி உள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, சட்டமாகவும் முழுவடிவம் பெற்றது. குடியுரிமை திருத்த சட்ட அமல்படுத்தப்பட்ட நாள் முதலே நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

Advertising
Advertising

நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே கேரள சட்டப்பேரவையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், புதுச்சேரி,  என பிற மாநிலங்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின. மேலும் தமிழகத்திலும் குறியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இது போன்று கொண்டு வரப்படும் தீர்மானங்கள் CAA-வை செயல்படுத்த விடாமல் மத்திய அரசை தடுக்குமா?. என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தங்களது மாநிலங்களில் குறியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கேரளா, சத்தீஸ்கர் இச்சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தையே அணுகியுள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் மத்திய அரசின் நிர்வாக வரம்பிற்குட்பட்ட குடியுரிமை சார்ந்தது என்பதால் அதை மாநில அரசுகள் அமல்படுத்தாமல் புறக்கணிக்க முடியாது என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அரசியலமைப்பு சட்டம் 246-ஐ இதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மாநில அரசுகளின் இது போன்ற நடவடிக்கைகள் மத்திய அரசின் அடையாள ரீதியில் வலுவான எதிர்ப்பு காட்டுவதற்கான ஒரு வழி என்றும் கூறப்படுகிறது. குடியுரிமை சட்டங்களை அமலாக்கியே தீர வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு நிர்பந்திக்க முடியாது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் தீர்ப்பு வந்த பின்பே இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த நகர்வை மேற்கொள்ள முடியும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் சட்டத்தை அமலாக்க முடியாது என மாநிலங்கள் கூறுவது சட்ட விரோதம் என மத்திய நாடாளுமன்ற விவாகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

Related Stories: