×

இந்திய கடற்பகுதியை கண்காணிக்கும் விதமாக தனுஷ்கோடியில் அமையும் புதிய கலங்கரை விளக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர்!!

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்திய கடற்பகுதியை கண்காணிக்கும் விதமாகவும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாகவும் தனுஷ்கோடியில் 50 மீட்டர் உயரத்தில் ரூ. 7 கோடி செலவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து (தனி பொறுப்பு) மற்றும் உரங்கள் இராசயணங்கள் துறை இனண அமைச்சர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதபுரம் மத்திய அரசின் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டமாக உள்ளது என்றார். மேலும் சாகர்மாலா திட்டம் மூலம் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் அதிகமான வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவித்தார்.    

 தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம்

பாக் ஜலசந்தி கடலில் 1964ல் வீசிய கடும் புயலால் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி நகரமே கடலில் மூழ்கி அழிந்தது. தற்போது 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மட்டுமே தனுஷ்கோடியில் வசித்து வருகின்றன. தனுஷ்கோடி நகரம் உருவானபோது பலதரப்பட்ட நிர்வாக கட்டிடங்கள், குடியிருப்புகள் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கப்பல் மாலுமிகள், படகில் செல்லும் மீனவர்களுக்கு, கடற்கரை பகுதிகளை அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கம் மட்டும் இங்கு அமைக்கவில்லை. பாம்பனில் மட்டுமே கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தனுஷ்கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கலங்கரை விளக்கத்தின் சிறப்பு அம்சங்கள்

தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் ரூ.7 கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டப்பட உள்ளது. 50 மீட்டர் உயரத்தில் இந்த கலங்கரை விளக்கம் கட்டப்படும். அதன் மேல் பகுதியில் 18 கடல் மைல் தூரத்திற்கு ஒளி வீசும் திறன் கொண்ட மின் விளக்கு பொருத்தப்படும்.மேலும் கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில், கடல் எல்லையை கண்காணிக்கவும், மீனவர்களை பாதுகாக்கவும் ரேடார் கருவியும் பொருத்தப்படும். கலங்ரை விளக்கத்துடன் இணைந்த கட்டிடத்தில் மின் அறை, உபகரண அறை, பாதுகாவலர் அறை ஆகியவற்றுடன், பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்களும் இடம் பெற உள்ளன.சூரிய ஒளி மின்சாரம் மூலம் இந்த கலங்கரை விளக்கம் செயல்படும். இந்த கலங்கரை விளக்கமானது ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

Tags : Union minister ,lighthouse ,Dhanushkodi ,Indian Ocean ,Minister of State ,Union , Lighthouse, Beating, Dhanushkodi, Union Minister
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...