‘விவேகத்தின்’ குருவாக திகழ்ந்த மகான்: இன்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் 184வது பிறந்தநாள்

எல்லா மதங்களுமே வெவ்வேறு வழிகளில் ஒரே கடவுளை தேடுபவைகள்தான்... கடவுள் ஒருவரே. மிகச்சிறந்த வழிபாட்டு முறைகளே கடவுளை அடைவதற்கான சிறந்த வழி’ என போதித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். 19ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆன்மிகவாதியாக போற்றப்பட்டவர். இந்தியாவில் மட்டுமல்ல... அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று ஆன்மிகத்தை உலகம் முழுவதும் பரப்பியவர். இவரது சீடரே வீரத்துறவி விவேகானந்தர்.  ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

மேற்கு வங்க மாிலம், காமர்புகூரில் 1836, பிப்ரவரி 18ம் தேதி குதிராம் - சந்திரமணிதேவிக்கு மகனாக பிறந்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல, சிறுவயதிலே இறை பக்தி அதிகம் கொண்டவராக திகழ்ந்தார் ராமகிருஷ்ணர். சுவாமி படங்கள் வரைவது, களிமண் சிலைகளை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். ராமகிருஷ்ணருக்கு 17 வயது இருக்கும்போது, குடும்பத்தில் வறுமை வாட்டி படைத்தது. இதனால் பிழைப்பு தேடி கல்கத்தா சென்றார். அங்குள்ள காளி கோயிலில் அவரது சகோதரருக்கு உதவியாக புரோகிதர் பணியை செய்து வந்தார். அண்ணன் மறைந்ததும் அவரே, காளி கோயில் புரோகிதர் ஆனார். தினந்தோறும் காளிக்கு பூஜை செய்து வந்த அவருக்கு, திடீரென ஒரு நாள் பெருத்த சந்தேகம் எழுந்தது. ‘நாம் கல்லுக்குத்தானே பூஜை செய்கிறோம். இதை எப்படி கடவுள் என பொருள் கொள்ள முடியும்’ என யோசிக்கிறார். அப்போது அவருக்கு பலர், ‘கடவுள் கண்களுக்கு புலப்படாத அரிய சக்தி’ என்றனர். ஆனால், அவரோ, ‘கடவுளை கட்டாயம் காண்பேன்’ என சிறப்பு பூஜைகள், தியானம் செய்தார். இப்படி சிரத்தை எடுத்தும், ‘காளி நமக்கு அருள் புரியவில்லையே’ என்ற ஆத்திரத்தில், காளியின் வாளினால் தன்னை அறுத்துக் கொள்ள முயன்றார். அப்போது எதிர்பாராமல் மயக்க நிலைக்கு சென்றபோது, தனக்குள் ஒரு ஒளி ஊடுருவியதாக உணர்ந்தார்.

இந்த சம்பவத்திற்கு பின் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டன. இதையடுத்து அவருக்கு சாரதாமணி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகும் தீவிர ஆன்மிகத்தை அவர் விடவில்லை. தாம்பத்ய வாழ்க்கையில் இருந்து அகன்று மனைவியை தாயாக மதித்து போற்றத் தொடங்கினார். பின்னர் பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்த்ரிகம், தோதாபுரியிடம் அத்வைத வேதாந்தம் கற்றார். ஆன்மிகமும், விவேகமும் வாழ்க்கையின் 2 கண்கள் என கூறியவர். ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக ஜோதி பிரகாசிக்க காரணமாக திகழ்ந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, ‘அவதாரப் புருஷர்’ என்று அனைவராலும் போற்றப்பட்டார். இவரது ஆன்மீகச்சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட நரேந்தரநாத் தத்தா என்பவர் இவரது முக்கிய சீடராக மாறினார். அவர்தான் சுவாமி விவேகானந்தர். அனைவருக்கும் புரியும் வகையிலும், உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையிலும், ஆன்மிக கருத்துக்களை பரப்பியவர் ராமகிருஷ்ண பரஹம்சர். எளிமையான ஜோதி போல காட்சி தரும் இவர், வாழ்க்கையின் இறுதிநாட்களில் தொண்டை புற்றுநோயால் பெரும் அவதியடைந்தார். இறுதியில் நோய் குணமடையாமலே, 1886, ஆக.16ம் தேதி அவரது உயிர் பிரிந்தது.மேலும், ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.

Related Stories: