வாடிப்பட்டியில் ஒரு வசதியும் இல்லை: குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே வாடிப்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி மக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். ஒட்டன்சத்திரம் அருகே ஐ.வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் இவர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘மேற்கண்ட பகுதியில் 150க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆண்டு

களுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்காத காரணத்தினால், ஊராட்சி அலுவலகத்திலிருந்து குடிநீர் வசதி செய்து தர மறுக்கின்றனர். குடிநீர் கேட்டு அலுவலகம் சென்றால் எங்களை விரட்டி அடிக்கிறார்கள்.

இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். குடிநீர், மின்சார வசதி இல்லாததால் இப்பகுதியில் வாழும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தாமதமாகிறது. மேலும் நள்ளிரவு நேரங்களில் விஷ பிராணிகள் தாக்குதலுக்கு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: