×

சாயல்குடி பகுதியில் தண்ணீரின்றி கருகும் உளுந்து பயிர்கள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சாயல்குடி: சாயல்குடி பகுதியில் போதிய தண்ணீரின்றி உளுந்து பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், அதற்கு அடுத்தப்படியாக மிளகாய், மல்லி, பருத்தி, நிலக்கடலை, கம்பு, குதிரைவாலி, சோளம், உளுந்து போன்ற  தானியவகை பயிரிடப்படுகிறது.
குறிப்பாக கடலாடி வட்டாரத்தில் இதம்பாடல், கடுகுசந்தை, சத்திரம், மேலச்செல்வனூர், பெரியகுளம், கூரான்கோட்டை, பூப்பாண்டியபுரம் எஸ்.தரைக்குடி, உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, முத்துராமலிங்கபுரம், செவல்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் உளுந்து  பயிரிடப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்த பருவ மழைக்கு பிரதான முக்கிய பயிரான நெல், அடுத்தப்படியாக உள்ள மிளகாய் போன்றவற்ற விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். குறுகிய கால பயிரான உளுந்து நன்றாக வளர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் காலம் கடந்து பயிரிட்டனர். விதை விதைத்தவுடன் இருந்த ஈரப்பதத்தால் செடிகள் நன்றாக வளர துவங்கியது. ஆனால் தொடர் மழையின்றியும், தண்ணீர் பாய்ச்ச போதிய வழியில்லாமல் பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, சுமார் 70 முதல் 80 நாட்களில் வளர்ந்து மகசூல் தரக்கூடிய வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, மதுரை 1 உள்ளிட்ட ரக உளுந்துகளை பயிரிட்டோம். ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததாலும், கண்மாய், குளங்களில் மழை தண்ணீர் வற்றி வருவதாலும், தண்ணீர் பாய்ச்ச வழியில்லை. இதனால் காய்த்து பிஞ்சு விட்ட நிலையில் செடிகள் வெயிலுக்கு கருகி வாட துவங்கி விட்டது.

இதனால் கடனுக்கு பணம் வாங்கி பல ஆயிரம் ரூபாய் செலவழித்து காய்காய்க்கும் தருவாயில் கருகி வருவதால் வேதனையாக உள்ளது. பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யும் வசதி இருந்தும் கூட, போதிய விழிப்புணர்வு, போதிய தகவல் கிடைக்காததால், காலக்கெடு முடிந்த நிலையில் இந்தாண்டு பயிர்காப்பீடு செய்ய முடியாமல் போய் விட்டது. எனவே பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். மேலும் வரும் காலத்தில் நெல் பயிர்களுக்கு வழங்கப்படும் அரசு மானிய சலுகைகள், உதவிகளை உளுந்து பயிர்க்கும் வழங்க வேண்டும், பண்ணைக்குட்டைகள், பயிர்காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு உரிய விழிப்புணர்வுகளை விவசாய காலங்களில் வேளாண் துறை அலுவலர்கள் விவசாய கிராமங்களில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags : area ,Sialkudi , Farmers',request , relief
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...