×

300 பணியாளர்கள், ராட்சத பொக்லைன்கள் கொண்டு கொள்ளிடம் கதவணை திட்ட பணிகள் தீவிரம்: டிசம்பருக்குள் முடியும் என அதிகாரிகள் தகவல்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், ஆண்டுதோறும் சம்பா நெல் விதைப்பு பருவத்தில் மேட்டூரில் திறக்கப்படும் காவிரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து ஆண்டிற்கு 2 முதல் 5 டிஎம்சி வரை வீணாகி வருகின்றன. இது தவிர மற்ற பருவங்களில் கர்நாடகத்தில் பொழியும் கனமழை காரணமாக திறக்கப்படும் உபரிநீரும் டெல்டா விவசாயிகளுக்கு பயன்படாமல் கடலுக்கு செல்கின்றன. ஒட்டுமொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு 7 முதல் 14 டிஎம்சிகள் வரை காவிரிநீர் வீணடிக்கப்பட்டு வந்தது. இதனை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்டும் மேலும் உள்ளூர் நிலத்தடி நீரை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மற்றும் விவசாய சங்கத்தினரும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டவேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தனர்.

 இதனையடுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு சட்டபேரவைவில் 110 விதியின் கீழ் கொள்ளிடம் ஆற்றில் கடலூர் மாவட்டம் ம.ஆதனூர் மற்றும் நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடியில் கதவணை கட்டப்படும் என அறிவித்தார். அதற்கான நிதியும் அப்போது ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்த நிலையில் ஆளும்கட்சியின் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கதவணை திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது ஒரு காரணம் எனில், அக்கால கட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரிகள் நடைபெற்று வந்ததும் கதவணைக்கு திட்டத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைந்தது.  

 இந்நிலையில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் வலுப்பெற்ற வண்ணம் இருந்த காரணம் மற்றும் இதுகுறித்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றங்களும் டெல்டா பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் வெளிப்பாடாக தற்போதைய எடப்பாடி அரசு கொள்ளிடத்தில் கடலூர்- நாகை மாவட்டங்களை இணைக்கும் கதவணை மற்றும் கடல்நீர் உட்புகாதவாறு தடுப்புச்சுவர் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 அணைகளுக்கு ரூ. 463 கோடி என உயர்த்தி, முதற்கட்டமாக இதற்கான இடங்கள் ஆற்றுபடுகையில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்காக ரூ.28 கோடியை அறிவித்தார். இதனையடுத்து கொள்ளிடம் ஆற்றில் மேலும் சில இடங்களில் கதவணைகளுக்காக ஆய்வுகள் முடிவுபெற்றுள்ள நிலையில் கடந்த 2019 மார்ச் 5ம் தேதி ஆதனூர்- குமாரமங்கலம் 84 கதவணைகளுடன் 2 வழி போக்குவரத்து பாலத்திற்கு ரூ463.45 கோடி நிதி ஒதுக்கி இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

 ஒப்பந்தத்தின் பெயரில் தனியாருக்கு விடப்பட்ட இப்பணியை அரசு பொதுப்பணித்துறை கண்காணித்து வருகின்றது.
இதற்காக ஆற்றில் முகாம் அமைத்து நிர்வாக பொறியாளர் கண்ணன் என்பவரின் தலைமையில் 11 இணை பொறியாளர்கள் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டபோது; முதற்கட்ட தூண்கள் எழுப்பும் பணிக்கு 300 தொழிலாளர்கள் இரவும், பகலும் பணி செய்து வருகின்றார்கள் வரும் டிசம்பர் 2020க்குள் இந்த குறிப்பிட்ட பகுதியில் முதற்கட்ட கதவணை மதகு பணிகள் முடிக்கப்பட வியூகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாலம் பணிகள் துரிதமாகவும் தரமானதாகவும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.  ஆரம்பகட்டத்தில் தண்ணீர் ஊருதல் போன்ற பிரச்னைகள் இருந்து வந்தன. தற்போது அவைகளும் தற்காலிக போர் அமைத்து வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதனால் வலதுபுற குமாரமங்கலம் மற்றும் இடதுபுற ம.ஆதனூர் ஆகிய பகுதிகளில் தடையின்றி கதவணை பணிகள் நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.

Tags : 300 employees, gigantic bougains ,plans intensified: Officials ,December
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...