பழநி ரயில் நிலையத்தில் சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்: மாற்றுத்திறனாளிகள் மனு

பழநி: பழநி ரயில் நிலையத்தில் பிரத்யேக டிக்கெட் கவுண்ட்டர் அமைத்து தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மதுரை தெற்கு ரயில்வே டிவிசனல் கமர்சியல் மேலாளரிடம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனு: பழநி ரயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடைக்கு செல்ல சாய்வுதளம் அமைக்கப்பட்டிருந்தாலும், கைப்பிடிகள் அமைக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பிடிமானமின்றி செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, முதல் நடைமேடைக்கு இருபுறமும் கைப்பிடி அமைக்க வேண்டும். 2வது மற்றும் 3வது நடைமேடைக்கு செல்ல அமைக்கப்பட்ட சாய்வுதளத்தில் ஒருபுறம் மட்டுமே கைப்பிடி உள்ளது. இரண்டு புறமும் கைப்பிடி அமைக்க வேண்டும். சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டின் இருபுறமும் கைப்பிடி அமைக்க வேண்டும்.

ரயில் நிலைய வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வெஸ்டர்ன் வகை கழிப்பறையை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் எடுக்க பிரத்யேக (சிறப்பு) டிக்கெட் கவுண்ட்டர் ஏற்படுத்த வேண்டும் அல்லது தற்போதுள்ள டிக்கெட் கவுண்ட்டரில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை என விளம்பரம் செய்ய வேண்டும்.  தொலைதூர ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் பெட்டிகளின் நிலை குறித்த அறிவிப்பு பலகைகள் (கோச் பொசிசன்) வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பிற பயணிகள் அமராமல் ரெயில்வே போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: