ஒரே கையெழுத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவோம் என சொல்லவில்லை, படிப்படியாகத்தான் மூடுவோம் என்று தான் கூறியுள்ளோம் : அமைச்சர் தங்கமணி

சென்னை : ஒரே கையெழுத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவோம் என நாங்கள் சொல்லவில்லைபடிப்படியாகத்தான் மூடுவோம் என்றுதான் கூறியுள்ளோம் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மதுக்கடை வருமானத்தைத்தான் அரசு நம்புகிறதா என்ற திமுக உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் கேள்வி

2020-2021-க்கான தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது கடந்த ஒரு மணிநேரமாக பேசிய திமுக எம்.எல்.ஏ மனோ தங்கராஜ், “வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனிடையே டாஸ்மாக் மூலம் 30,000 கோடி வருவாய் கிடைப்பதாக தெரிவிக்கிறீர்கள். இவ்வாறு அரசுக்கு வருவாய் வருவது நல்லதல்ல. மது விலக்கை அமல்படுத்துவோம் என சொன்னீர்கள். எப்போது அமல்படுத்தப்படும்” எனக் கேள்வி எழுப்பினார்.

 அமைச்சர் தங்கமணி பதில்

இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “மது குடிப்பது அதிகரிப்பதே, டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம். தமிழகத்தில் மக்கள் குடிக்கிறார்கள். அதற்காக என்ன செய்ய முடியும்? திமுக ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறினீர்கள். நாங்கள் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதி கொடுத்தோம். அதன்படி தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். ஏற்கெனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கடைகள் இயங்கும் நேரமும் 2 மணிநேரம் குறைக்கப்பட்டது.திமுக ஆட்சியில் இருந்தபோதும் டாஸ்மாக் மூலம் 16 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது. அப்போது ஒன்றரை லட்சம் கோடி பட்ஜெட்டாக இருந்தது. இப்போது 2 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதனால் மது விற்பனையும் அதிகரித்துள்ளது” என பதிலளித்தார்.

Related Stories: