×

மீண்டும் சாயக்கழிவுநீர் கலப்பா?: நொய்யல் ஆற்றில் நிறம் மாறி வரும் தண்ணீர்: ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை

க.பரமத்தி: க.பரமத்தி அருகே உள்ள நொய்யல் ஆற்றில் தண்ணீர் நிறம் மாறி வருவதால் மீண்டும் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து வருவதாக அச்சமடைந்துள்ள கரையோரப்பகுதி விவசாயிகள் உடனடியாக நீரை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து நொய்யல் ஆறு துவங்குகிறது. அந்த மாவட்டத்திலேயே சின்னமுத்தூர் என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் தடுப்பணை உள்ளது. இப்பகுதியில் இருந்து அஞ்சூர் ஊராட்சி கொளந்தாபாளையம் என்ற இடத்தில் கரூர் மாவட்ட எல்லையை நொய்யல் ஆறு தொடுகிறது. அங்கிருந்து அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, முன்னூர், அத்திபாளையம், கரூர் ஒன்றியத்தில் நொய்யல், சென்று காவிரியில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்று பாசனத்தை நம்பி சூரியகாந்தி, பருத்தி, நெல், மக்காச்சோளம், கம்பு போன்ற பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

க.பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் ஆத்துப்பாளையம் அணையில் நொய்யல் நீர் தேக்கம் அணை உள்ளது. இந்த அணை மூலம் நொய்யல் ஆற்றில் மழை வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரையும், கீழ் பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரையும் தேக்கி வைத்து, கரூர் மாவட்டத்தில் சுமார் 19,000 ஏக்கர் விளைநிலம் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அணை கட்டி முடிக்கப்பட்டு 5ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்தது. அதன்பிறகு திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாய நிலங்கள் பாழானது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அணை மூடப்பட்டது. இதன் பிறகு மழைநீர் வந்ததால் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கார்வழி அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கடந்த ஆண்டு விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது பிறகு நொய்யல் ஆற்றில் நிறம் மாறி தண்ணீர் வந்ததால் அணைக்கு திறக்கப்படவில்லை நேரடியாக ஆற்றில் செல்கிறது.

இந்த தண்ணீரால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், சுத்தமான தண்ணீராக இல்லாமல் தண்ணீர் நிறம் மாறி நுரையோடு வருவதால், மீண்டும் நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயக்கழிவு கலந்து வருகிறதா என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. எனவே நொய்யல் ஆற்றில் நிறம் மாறி அதிக நுரையோடு வரும் தண்ணீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயத்திற்கு தகுதியான பாசன நீரை வழங்க வேண்டுமென கரையோரப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Noel River , Dye water? , Noel River, changing color , coming water
× RELATED 20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம்: பாலம் அமைக்க கோரிக்கை