மூன்று ஆண்டுகளாக இழுபறியாக நீடிக்கும் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறுமா?

மதுரை: மூன்று ஆண்டுகள் இழுபறியாக நீடிக்கும் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மதிப்பீடு ரூ. 1,320 கோடியாக திடீரென்று உயர்ந்துள்ளது. இதனால் இத்திட்டத்திற்கு கடன் வழங்கும் ஆசிய வளர்ச்சி வங்கி, குழாய்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க விதித்துள்ள நிபந்தனையை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து குழாய் மூலமாகவும், வைகை ஆற்றில் மேலக்கால், கோச்சடை, மணலூர் ஆகிய நீரேற்று நிலையங்கள் மூலமாகவும் கிடைக்கிறது. இது தவிர காவிரி ஆற்றில் இருந்தும் குழாய் மூலமாக வருகிறது. தற்போது மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் மக்கள் தொகை 18 லட்சத்தை எட்டியதால், குடிநீரின் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. மாநகர் தவிர மாவட்டத்தின் புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளின் மக்கள் தொகை 20 லட்சத்தை தாண்டியது. இதனால் குடிநீர் தேவை அதிகரித்து கோடையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளையாகிறது. அடிக்கடி கோடையில் 4 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யும் நிலை ஏற்படுகிறது.

எனவே, மதுரை குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முல்லைப் பெரியாறு அணை அருகே லோயர்கேம்பில் இருந்து மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு 158 கி.மீ. தூரம் குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வரும் சிறப்பு திட்டம் ரூ. 1,200 கோடியில் கடந்த 2017ம் ஆண்டு ஜூனில் அரசு அறிவித்தது. கடந்த 3 ஆண்டுகளாகியும் திட்டம் எப்போது கைகூடி குடிநீர் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் திட்டப்பணிகள் இன்னும் தொடங்கவில்லை. ரூ. 1,020 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதில் ஒரு பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 2 பணிகளுக்கு டெண்டர் விடும் பணி முடியவில்லை. இந்த சூழலில் மாநகர் 100 வார்டுகளில் தற்போதுள்ள பழைய குடிநீர் பகிர்மான குழாய்களை மாற்றி புதுகுழாய் பதிக்கும் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியில் ரூ.300 கோடி மாநகராட்சி கடன் வாங்குகிறது. இதனால் திட்ட மதிப்பீடு ரூ. 1.020 கோடியில் இருந்து 1,320 கோடியாக திடீரென்று உயர்ந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேறியதும் 24 மணி நேரமும் மதுரையில் குடிநீர் சப்ளையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் கடன் வழங்கும் வங்கி குழாய்களில் மீட்டர் பொருத்தி மின் கட்டணம் போல் வசூலிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இதை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு

மதுரை மாநகர் முழுவதும் குடிநீர் விநியோகம் மாநகராட்சி மூலம் நிறைவேற்றப்படுகிறது. பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்க திட்டம் தயாராகி உள்ளது. ஏற்கனவே, கோவையில் குடிநீர் விநியோகம் சில ஆண்டுகளுக்கு முன் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் தேவை 300 மி.லிட்டர்

மதுரை மாநகர் 100 வார்டுகளுக்கு ஒரு நாள் குடிநீர் தேவை 300 மில்லியன் லிட்டர். தற்போது 150 முதல் 200 மில்லியன் லிட்டர் கிடைக்கிறது. 100 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை நிலவுகிறது. பெரியாறு கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் 125 மில்லியன் லிட்டர் கூடுதலாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: