இரட்டை குடியுரிமை தொடர்பாக அமைச்சர் பேசியதில் உரிமை மீறல் ஏதுமில்லை : சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இலங்கை தமிழர்களுக்கான இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியதில் உரிமை மீறல் ஏதுமில்லை சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சனை : தங்கம் தென்னரசு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2ம் நாளாக பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கக் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சனை எழுப்பி திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு உரை நிகழ்த்தினார்.

அவர் கூறியதாவது,இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியம் என ஜனவரி 8ம் தேதி தமிழக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அரசியல் சட்டத்தை சுட்டிக்காட்டி இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமைச்சரின் பேச்சு உண்மைக்கு மாறாக உள்ளது. பேரவை விதிகளின்படி அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களின் நலனுக்கு கேடுவிளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் நடவடிக்கை தேவை, என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்

இதற்கு பதில் அளித்த தமிழக வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று தான் ஆளுநர் உரையில் இருந்தது. இலங்கை குடியுரிமையை இழந்து இந்திய குடியுரிமை பெறும்போது இலங்கையில் அவர்களுக்கான உரிமை இல்லாமல் போய்விடும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு.1964ல் 9.75 தமிழர்களை நாடற்றவர்கள் என கருதி 4 லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இந்திய குடியுரிமை பெறும்போது இலங்கையில் அவர்களுக்கான உரிமை இல்லாமல் போய்விடும். என்றார்.

சபாநாயகர் தனபால் விளக்கம்

இதனிடையே இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியம் என பாண்டியராஜன் பேசியதில் உரிமை மீறல் இல்லை என்று சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்தார். அமைச்சர் பாண்டியராஜனின் விளக்கத்தை ஏற்று சபாநாயகர் தனபால் சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பதில் திருப்தி இல்லை என்று கூறி திமுக மற்றும் காங்கிரஸ் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

துரைமுருகன் பேட்டி

குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்று வெளிநடப்பு செய்த பின் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக  அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் என்றும்  அமைச்சர் பாண்டியராஜன் பேச்சில் உரிமை மீறல் இல்லை என்ற சபாநாயகரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் துரைமுருகன் கூறினார்.

Related Stories: