தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்து நகைக்கடன் வழங்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் உண்மையான விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தொடர்ந்து நகைக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். 17ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி, 2ம் நாளாக பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

அப்போது, வங்கிகளில் மார்ச் மாதத்துடன் நகை கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்களே என்று சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது. தமிழகத்தில் 4,449 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அங்கு விவசாயிகளுக்காக ரூ.11,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். வணிக வங்கிகளில் விவசாயத்துக்கு நகை கடன் என்று தவறாக கடன் கொடுப்பதை தடுக்கவே மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உண்மையான விவசாயிகளுக்கு நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும். பணமதிப்பிழப்பு போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டுறவு வங்கிகள் தனது பணியை சிறப்பாக செயலாற்றியுள்ளன என்று கூறியுள்ளார். முன்னதாக, திமுக உறுப்பினர் சவுந்திரபாண்டியன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டு உள்ள இடங்களில் பகுதிநேர கடைகளுக்கு பதில் நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும். அதிமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழகம் முழுவதும் 2,424 ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன, என்று கூறியுள்ளார்.

Related Stories: